உள்ளூர் செய்திகள்

சரித்திரம் பழகு: கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட நகரம்

குஜராத் மாநிலத்தில் இருந்தது, இந்த புராணக் காலத்து நகரம். துவாரவதி என்ற பெயரில் மகாபாரதக் காலத்தில் கோலோச்சியது. பின்னர், அந்நகரம் கடலில் மூழ்கி விட்டதாகவும் குறிப்புகள் உண்டு. அத்தகைய நகரம் இருந்ததா என்று அறிவதற்கு, தொல்லியல் துறை ஆய்வில் ஈடுபட்டது.1983ஆம் ஆண்டு முதல் கோவாவில் உள்ள தேசிய கடலியல் நிறுவனத்தின் (National Institute of Oceanography) உதவியுடன், கடல்சார் தொல்லியல் ஆய்வுகள் நடந்தன. கடலுக்கடியில் கட்டங்கள் (grid) அமைத்து, பாத்மெட்ரி (bathymetry) என்னும் முறையைக் கொண்டு ஆழத்தை அளந்து, ஆய்வுகள் மேற்கொண்டனர். அதில் உயரம் குறைந்த ஒரு சுவரின் மிச்சம் கண்டுபிடிக்கப்பட்டது. சில சிவப்பு மண்பானைச் சில்லுகளும் கிடைத்தன. இவை மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தையவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடலுக்கடியில் மூழ்கிய சிலர், குழாய் மூலம் மண்ணை ஏற்றியதில், பானைச் சில்லுகளும், வேறு சில தொல்லியல் சான்றுகளும் கிடைத்தன. 1985இல் நிகழ்ந்த அகழாய்வில் மூன்று கட்டடங்கள், வீடுகளின் சுவர்கள், மதில்களின் மிச்சங்களும் காணப்பட்டன. தொடர்ந்து 1990ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட நங்கூரங்கள், மரக்கலங்களின் மிச்சங்கள், சுவர்கள் ஆகியவை ஆராயப்பட்டன. அங்கே மிகப் பழமையான துறைமுகப்பட்டினம் ஒன்று, கடலுக்கடியில் இருந்திருக்க வேண்டும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. அந்த நகரம் தான் துவாரவதி என்னும் துவாரகை (Dwarka). இது கிருஷ்ணர் அரசாட்சி செய்த நகரம் என்று சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !