அமிலத்திற்கு பதில் அன்பு
2017ம் ஆண்டிற்கான ஐ.நா. சபையின் சாதனையாளர் விருதை வென்றுள்ளார் ரியா ஷர்மா (Ria Sharma) எனும் டில்லிப் பெண். இங்கிலாந்திலுள்ள கல்லூரி ஒன்றில் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்தார். தன் படிப்பின் ஒரு பகுதியாக அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய ஓர் ஆவணப் படம் எடுக்கும் நோக்கத்தோடு டில்லி வந்தார். பாதிக்கப்பட்டோருடன் பழக ஆரம்பித்த ரியா, அவர்களின் துயரங்களைக் கண்டு மனம் உருகினார்.நாடு முழுவதும் இருக்கும் அமில வீச்சுக்கு ஆளானவர்களுக்கான தொண்டு நிறுவனமானஎம்.எல்.என்.எஸ். (Make Love Not Scars - MLNS) எனும் அமைப்பைத் தொடங்கினார். 'தழும்புகளை அல்ல; அன்பை பரிசளிப்போம்' என்பதே இப்பெயரின் பொருள். இவர்களின் மருத்துவம், மறுவாழ்வு போன்றவற்றில், சிறப்பாகப் பணியாற்றி வரும் ரியாவின் சமீபத்திய சாதனை, டில்லியில் இவர்களின் மறுவாழ்வுக்கான ஒரு மருத்துவமனையை அமைத்திருப்பது ஆகும். யுனிசெப் நிறுவனம் வழங்கும் இந்தச் சாதனையாளர் விருது, கடந்த 19ம் தேதி நியூயார்க் நகரில் ரியாவுக்கு வழங்கப்பட்டது.