மகாத்மா போற்றிய மாமனிதர்
கோபால கிருஷ்ண கோகலே பிறந்த நாள் மே 9விடுதலை பெறுவது மட்டும் அல்ல. வன்முறையைத் தவிர்த்தல், அரசு நிறுவனத்துக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டுவருதல் ஆகியவற்றிலும் ஆர்வமாக இருந்தவர் கோபால கிருஷ்ண கோகலே.மகாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள கோதாலுக்கில் பிறந்தார். பெற்றோர் செல்வந்தராக இல்லாதபோதும் கோகலேவை ஆங்கிலம் படிக்க வைத்தனர். மேலை நாட்டுக்கும் அனுப்பிவைத்தனர். மேலை நாட்டுக் கல்வியை அவர் வேலை தேடப் பயன்படுத்தவில்லை. இந்திய விடுதலைக்காகத் தன் கல்வியைப் பயன்படுத்தினார். இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக 1889ல் இணைந்தார். சாதாரண இந்தியர்களுக்கு பொதுத்துறை விஷயங்களில் அதிக அளவு பிரதிநிதித்துவம் கிடைக்க, பல ஆண்டுகள் போராடினார்.இந்தியாவின் அரசியல் மாற்றம் என்பது இளைய தலைமுறையினரின் கல்வியில் இருக்கிறது என்பதைத் தீவிரமாக நம்பியவர் கோகலே. மகாத்மா காந்தி வளர்ந்து வந்த காலத்தில் அவருக்கு ஆலோசகராக இருந்தவர் கோகலே. மகாத்மா காந்தி கோகலேவைத் தன் வழிகாட்டி என்றும் ஆசான் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 'படிகம் போலத் தூய்மையானவர், ஆட்டுக்குட்டி போல மென்மையானவர், சிங்கம் போல வீரமுடையவர், பெருந்தன்மை கொண்ட இவர் அரசியல் அரங்கில் சரியான மனிதர்' என்றும் போற்றினார். மேன்மை பொருந்திய கோகலே இன்னும் நம் மனதை விட்டுப் போகலே!