உள்ளூர் செய்திகள்

கவிதைகளில் மணத்தவர்

அறந்தாங்கி அருகே உள்ள கன்னாரியேந்தல் என்ற ஊரில் பிறந்தவர் கொத்தமங்கலம் சுப்பு. கவிஞர், எழுத்தாளர், இயக்குனர் என, பன்முகத் திறமை கொண்டவர். வானொலிக்கு வில்லுப்பாட்டு, நாடகங்கள் எழுதியவர். வார இதழ் ஒன்றில் 'தில்லானா மோகனாம்பாள்' என்ற தொடர்கதையை எழுதி, அந்தக் காலத்தில் வாசகர்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றவர். பிறகு அந்தக் கதை திரைப்படமாகவும் வந்தது.மக்களுக்குப் புரியும் வகையில், எளிய வார்த்தைகளால் கவிதை எழுதியவர். காந்தியைப் பற்றி இவர் எழுதிய 'காந்தி மகான்' வில்லுப்பாட்டை, அந்தக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வியந்து ரசித்தார்கள், பாராட்டினார்கள். அகராதியைப் பார்க்காமல் எட்டாம் வகுப்பு மாணவன்கூடப் புரிந்து கொள்ளத்தக்க வகையில் எளிமையாக கவிதைகளில் சொற்களைக் கையாண்டவர். அது தான் இவரின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.தாலாட்டுப் பாடலில்கூட, தேசபக்தியைப் புகுத்தியவர்.'கோட்டையதன் மேலே கொடிக்கம்பத்துச்சியிலேநாட்டி வைத்த கொடிகாண நம் குமரன் வந்தானோ?' என்று இந்தியா, விடுதலை பெற்று, தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கும் காட்சியுடன் ஒப்பிட்டுப் பாடினார். தேசம் விடுதலை பெற்ற அன்று, விடியற்காலை வானொலியில், இவர் எழுதிய பாடல்தான் ஒலிபரப்பானது. கொத்தமங்கலம் சுப்புவின் கவிதைகள், இவரின் மறைவுக்குப் பின், குடும்ப வாரிசுகளால் தொகுக்கப்பட்டு 'மருக்கொழுந்து' என்ற பெயரில் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளன. 'கொத்தமல்லி குழம்பில் மணக்கும், அண்ணன் சுப்பு கவிதையில் மணப்பார்' என்று மறைந்த முன்னாள் முதல்வர், கருணாநிதி இவருக்குப் புகழாரம் சூட்டினார். பத்மஸ்ரீ, கலைமாமணி இவர் பெற்ற விருதுகளில் அடங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !