மனம் குவியும் இசை: கமகம்: கேள்வி பதில்
கர்நாடக சங்கீதத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்வரங்களின் இணைப்பின் மூலம், கீர்த்தனைக்கு அழகு சேர்க்கும் முறையே கமகம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மூலம் கமகங்களின் வகைகளைக் கண்டுபிடியுங்களேன். 1. ஒரு நூலில் தொங்கும் பெண்டுலம், இட வலமாக வல இடமாக ஆடுவது போன்ற கமகம் இது. உதாரணமாக காந்தாரத்துக்கும் (க) மத்யமத்துக்கும் (ம) இடையே ஸ்வரத்தை முன்னும் பின்னும் பலமுறை அசைக்கும்போது உருவாகும் கமகம்.2. குறிப்பிட்ட ஸ்வரத்தில் இருந்து கீழ் நோக்கி 'சர்ர்ர்ர்...' என இறங்கும் கமகம். உதாரணமாக மத்யமத்தில் (ம) இருந்து நேர் கீழாக காந்தாரம் (க), ரிஷபம் (ரி) வழியே இறங்கி ஷட்ஜமத்தில் (ஸ) முடிந்தால் இந்த வகை கமகம் உருவாகும். 3. குறிப்பிட்ட ஒரு ஸ்வரத்தினை அடுத்த மேல் ஸ்வரத்தை நோக்கி ஒரு வேகமான அழுத்தம் கொடுத்துப் பிறகு கீழ் ஸ்வரங்கள் நோக்கி 'சர்ர்ர்ர்...' என இறங்கும் கமகம். உதாரணமாக, ஒரு கீர்த்தனையின் அவரோகணத்தில் 'ஸா..நி..த..ப' என்று பாடும்போது நிஷாதத்தில் (நி) இருந்து மேல் ஷட்ஜமத்துக்கு (ஸ) கண்ணிமைக்கும் நேரத்தில் சென்று பிறகு மீண்டும் நிஷாதம் (நி) வந்து தைவதம் (த) வழியே பஞ்சமத்தில் (ப) முடித்தால் பிறக்கும் கமகம். 4. கர்நாடக சங்கீத இசைக்கருவிகளில் பயன்படும் கமகம். ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு ஸ்வரங்களைத் தொடும் கமகம். உதாரணமாக, வீணையின் மூன்று தந்திகளை (கீழ்ஸ்தாயி ப, மேல்ஸ்தாயி ஸ, மேல்ஸ்தாயி ப) ஒரே விரலில் பிடித்து மூன்று வெவ்வேறு ஸ்வர ஸ்தானங்களை ஒரே மீட்டலில் வாசிக்கும் கமகம்.5. ஓர் ஆதார ஸ்வரத்தில் இருந்து பல்வேறு ஸ்வரங்களுக்குத் தாவும் கமகம். உதாரணமாக, ஷட்ஜமம் (ஸ) என்கிற ஆதர ஸ்வரத்தில் இருந்து 'ஸ...க', 'ஸ...ம', 'ஸ...ப', 'ஸ...த' எனப் பல்வேறு ஸ்வரங்களுக்குத் தாவும் இந்த கமகம்.விடைகள்:1. கம்பித கமகம் 2. ஜாரு கமகம் 3. ஜண்ட கமகம் 4. திரிபின்ன கமகம் 5. தாட்டு கமகம்