உள்ளூர் செய்திகள்

நாசாவிற்குச் செல்லும் மாநகராட்சி மாணவர்கள்

சென்னை மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 8 பேர், கல்விச் சுற்றுலாவுக்காக வரும் மே மாதம் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிற்கு செல்கின்றனர்.சென்னை மாநகராட்சியின் கல்வித்துறையும், சென்னை கிழக்கு ரோட்டரி கிளப்பும் இணைந்து மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையிலும், அறிவியல் ஆர்வத்தை உண்டாக்கும் வகையிலும் கடந்த 2 ஆண்டுகளாக பல விதமான அறிவியல் சார்ந்த போட்டிகளை நடத்தி வருகின்றன. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர் வெளிநாடுகளுக்குச் கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். அந்நாடுகளில் பின்பற்றப்படும் கல்விமுறை, அறிவியல் ஆய்வுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்படுகிறது. நடப்புக்கல்வி ஆண்டில் சென்னை மாநகராட்சியில் உள்ள 70 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு அறிவியல் போட்டிகள் நடத்தப்பட்டன. மூன்று சுற்றுக்களாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதிச்சுற்று கடந்தவாரம் நடைபெற்றது.இதில் வெற்றி பெற்ற 8 மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையாளர் வழங்கினார். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் வரும் மே மாதம் அமெரிக்காவில் உள்ள 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கல்விச் சுற்றுலாவாக அழைத்து செல்லப்பட உள்ளனர்.மேலும், இவ்விழாவில் உப்புநீரை, நன்னீராக மாற்றும் திட்டத்தை வடிவமைத்தமைக்காக இளம் சுற்றுச்சூழல் விஞ்ஞானி விருது பெற்ற சென்னை வண்ணாரப்பேட்டை மேல்நிலைப் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவர்களான பி.அரவிந்த், எஸ்.மனோஜ்குமார், பி.எஸ்.பிரவீண் குமார் ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !