உள்ளூர் செய்திகள்

இசையே மனசுக்கு மருந்து!

“என்ன கதிர், ஸ்வெட்டர் போட்டுக்கிட்டு வந்திருக்கே? அவ்வளவு குளிருதா?” காலையில் பள்ளிக்கு வரும்போது உமா மிஸ் கேட்டார்கள்.“ஆமாம் மிஸ். மார்கழி வந்துடுச்சாம், எங்கம்மா சொன்னாங்க. இந்த மாசம் முழுக்க பனியா இருக்குமாம்.”“ஆமாம். பனி மட்டுமல்ல, இசையாவும் இருக்கும். தமிழ்நாட்டுல இசைன்னா அது டிசம்பர், ஜனவரி தான். எல்லா ஹால்லேயும் சங்கீத மழைதான். உனக்கு மியூசிக் கேட்கப் பிடிக்குமா?”“எனக்கு சினிமா பாட்டுதான் மிஸ் தெரியும். எங்க கசின்ஸெல்லாம் நல்லா பாடுவாங்க, இன்ஸ்ட்ருமென்ட்ஸ் வாசிப்பாங்க. நான் தூர இருந்து பார்ப்பேன். இந்த முறைகூட, ஓர் அண்ணா, ஒரு கச்சேரிக்கு வாசிக்கறாராம். வாங்கன்னு வீட்டுக்கு வந்து கூப்பிட்டிருக்கார் மிஸ்.”“அப்ப, கண்டிப்பா போங்க. இசையினால கிடைக்கற பலனுக்கு அளவே இல்லை. கண்ணுக்குத் தெரியாத பலன் தான் ரொம்ப அதிகம்.”“கண்ணுக்குத் தெரியாத பலன்னா?”“இசையில் ரெண்டு விஷயம் இருக்கு. ஒண்ணு ரசனை, இன்னொண்ணு திறமை. வாத்தியமோ, வாய்ப்பாட்டோ கத்துக்கறதுக்கு ஒரு ஒழுங்கு, டிசிப்ளின் வேணும். முறையாக ஓர் ஆசிரியர்கிட்ட போய் கத்துக்கணும். அதனோட நுணுக்கங்கள் படிப்படியாக தெரியவரும். பயிற்சி செய்யச்செய்ய, தேர்ச்சி வரும். இசைங்கறது முற்றிலும் ஒரு புதிய மொழி. அதைக் கத்துக்கும்போது நிறைய பலன் கிடைக்கும்.”“என்ன பலன்கள் மிஸ்?”“ஞாபகசக்தி அதிகமாகும். கவனம் கூர்மையடையும். எதையும் மேலோட்டமாகப் பார்க்க முடியாது. ஆழமாகப் புரிந்துகொண்டு, அதை மனசுல வாங்கிக்க முடியும். ஏன்னா, மீண்டும், அதை மேடையிலோ, வேற அரங்கத்திலோ, நிகழ்த்திக் காட்டணும் இல்லையா? அப்படின்னா, அந்தக் கூர்மை இருந்தாத்தான், அதுல இருக்குற நேர்த்தி பிடிபடும். அப்புறம், தனித்துவம் வரும். தனக்குன்னு ஒரு பாணியை உருவாக்கிக்கத் தோணும். இதெல்லாம் அப்படியே பாடங்களைப் படிக்கும்போதும் பயன்படும். மியூசிக் கத்துக்கற பசங்களால், வகுப்புல நல்ல மார்க் வாங்க முடியும் தெரியுமா?”“அப்படியா மிஸ், எங்கப்பா, மியூசிக் எல்லாம் வேணாம், டைம் வேஸ்ட், படிப்புல கவனம் போயுடும்னு சொல்றாரே, மிஸ்.”“தப்பான அபிப்பிராயம். அவர் வேற விஷயத்துக்காக பயப்படறார்னு நினைக்கறேன். அதாவது, இசையில ஆர்வம் ஏற்பட்டுட்டா, படிப்படியாகப் படிப்புல ஈடுபாடு போயிடும், அப்புறம் நான் இசையையே எதிர்காலமா, தொழிலாக எடுத்துக்கறேன்னு கிளம்பிடுவியோன்னு யோசிக்கிறார். உண்மையில, இசையையே தொழிலாக எடுத்துக்கறது தப்பேயில்ல. ஆனால், பெற்றோர்கள்கிட்ட இந்த பயம் இருக்கிறது நிஜம்தான்.”“ஓ! அப்ப, இசையில ஈடுபாடு ஏற்பட்டா, வாழ்க்கையே மாறிடுமா மிஸ்?”“சந்தேகமே வேண்டாம். அது வெறும் ஸ்கில் மட்டுமல்ல. அது கலை. மனசை ஒருமுகப்படுத்துற, மேம்படுத்துற கலை. மக்களோட மனசை சுண்டியிழுக்கிற கலை. வெளிநாடுகள்ல பல ஸ்கூல்கள்ல, இரண்டு வகுப்புகளுக்கு நடுவே, ஏதேனும் ஓர் இசைக்கருவியை வாசிக்கிறாங்க. அது, மாணவர்களோட மன அழுத்தத்தைக் குறைக்குதுன்னு ஆய்வுப்பூர்வமா நிரூபிச்சு இருக்காங்க. மனசு ரிலாக்ஸ் ஆனவுடனே, அடுத்த வகுப்புல அடுத்த பாடத்தை ஸ்டூடண்ட்ஸ் கவனமா படிக்கறாங்க. பல பள்ளிகள்ல, மாணவர்கள் லீவே போடறதில்லைன்னா பார்த்துக்கோயேன்.”“ரசனைன்னு ஒண்ணு சொன்னீங்களே மிஸ். அது என்ன?” என்று ஓவியா கேட்டாள்.“அது இன்னொரு முக்கியமான பலன். மனுஷனுக்கு உடம்பைப் போலவே மனசும் முக்கியமானது. இசை சிகிச்சை இங்கேதான் ஆரம்பிக்குது. வாழ்க்கையில பல பிரச்னைகள் ஏற்படலாம், சவால்கள் வரலாம். இதெல்லாம் மனசுக்கு பெரிய கஷ்டத்தைக் கொடுக்கும். என்ன செய்யறதுன்னு புரியாமல் திண்டாட்டம் ஏற்படலாம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் இசையைக் கேக்கறதோ, பாடறதோ, வாத்தியங்களை வாசிக்கறதோ, பெரிய ரிலீஃபைக் கொடுக்கும். தெளிவைக் கொடுக்கும். நம்பிக்கையைக் கொடுக்கும். துணிச்சலைக் கொடுக்கும். இதனோட இன்னொரு பரிமாணம் தான் ரசனை. அது மனசு அடையற நேர்த்தி. பக்குவம். அழகு. இந்த உலகத்தையும் அதனோட பல்வேறு விசித்திரங்களையும் பார்க்கவும் உணர்ந்து கொள்ளவும் ரசனை வேண்டும். கலைகளிலேயே ஓவியமும் இசையும் தான் நுட்பமானவை. அது மனசுக்குள்ள ஏற்படுற முதிர்ச்சி. ரசனை மேம்பட மேம்பட, உலகத்தின் மீது எந்தப் புகாரும் இருக்காது. ஒவ்வொண்ணையும் அதனதன் இயல்பான தன்மையோடு புரிந்துகொண்டு, ஏத்துக்கற வினயம் வந்துடும்.அடிப்படையில, நாமெல்லாம் ஆசைப்படறது, நிறைவுக்காகத்தான். போதுங்கற எண்ணம் வரவே வராது. ஆனால், இசை, அந்த மனநிறைவைக் கொடுக்கும். ஏதோ ஒன்றைச் சாதித்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். நான் எதைச் செய்யவும் தகுதியற்றவன், பிரயோஜனமில்லாதவன் என்கிற தாழ்வுமனப்பான்மை இருந்துச்சுன்னா, அது இசையால மறைஞ்சு போயிடும். இசை, முகத்துல பொலிவைக் கொடுக்கும். ஒளியை வழங்கும். உள்ளுக்குள்ள ஒரு ரீங்காரம் கேட்டுக்கிட்டே இருக்கும். இதெல்லாம் ஸ்கூல் காலத்துலேயே ஆரம்பிச்சா எவ்வளவு நல்லதுன்னு இன்னிக்கு உலகமெங்கும் இருக்கும் கல்வியாளர்கள் யோசிக்கிறாங்க. பல நாடுகள்ல, இசையை அடிப்படையாகக் கொண்ட பாடத்திட்டத்தையே வகுத்து இருக்காங்க. தனியாகப் பள்ளிக்கூடங்களே ஆரம்பிச்சு இருக்காங்க.நம்ம தமிழ்நாட்டுல இசை இல்லாத இடமே கிடையாது. அதுவும் கர்நாடக சங்கீதமும் தமிழ் இசையும் கொடிகட்டிப் பறக்கற பூமி. வாய்ப்பாட்டோ, வாத்தியங்களோ, ஏதோ ஒண்ணு கத்துக்கோ. குறைந்தபட்சம், கச்சேரிகளுக்குப் போக ஆரம்பி. அப்போதான், எவ்வளவு பெரிய பொக்கிஷத்தை நாம் வெச்சிருக்கோம்ங்கற உண்மை உனக்குப் புரியும்.”உணர்ச்சிப் பிழம்பாக உமா மிஸ் பேசியபோது, என்னால் குறுக்கே பேசவே முடியவில்லை. அவரது வேகம் என்னையும் தொற்றிக்கொண்டது. உமா மிஸ் சொன்னது போல், முதலில் கச்சேரிக்காவது போய்க் கேட்கவேண்டும் என்று மனத்தில் முடித்துப் போட்டுக்கொண்டேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !