உள்ளூர் செய்திகள்

போருக்கு பலியாகும் இயற்கை!

யுத்தத்தின் சத்தம் வேண்டாம் என்கிற எண்ணம் இந்தியா உட்பட உலக நாடுகளில் இருக்கின்ற மக்களிடையே மேலோங்கி வருகிறது.எந்த நாட்டு மனிதராக இருந்தாலும் உயிரிழப்பின் வலி எல்லோருக்கும் பொதுவானதுதானே? போரின் கொடூர விளைவுகளால், மக்கள் அகிம்சை என்கிற உயரிய நோக்கத்தை நோக்கி திரும்பி வருகின்றனர்.இந்த யுத்தம் என்பது மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளையும் பெரிய அளவில் பாதிக்கக்கூடிய ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா? போரால் காட்டுயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. யுத்தத்திற்கும் விலங்குகளுக்கும் என்ன தொடர்பு? யுத்தம் நடக்கின்ற இடத்தில் விலங்குகள் இருப்பதில்லையே! அவை காடு அல்லது வனவிலங்கு சரணாலயத்தில் பாதுகாப்பாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம்? ஆனால் நீங்கள் நினைப்பது போல இல்லை.உதாரணத்திற்கு மொசாம்பிக் என்கிற ஆப்பிரிக்க நாட்டை எடுத்துக் கொள்வோம்.1975-ம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்தது. விடுதலை கிடைத்த இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த நாட்டில் உள்நாட்டுப்போர் வெடித்தது. பதினைந்து ஆண்டுகள் அந்நாட்டில் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. இதன்விளைவாக தோராயமாக 10 லட்சம் மக்கள் வதைபட்டு இறந்தனர். பலியான விலங்குகள்!அரசுப் படைகள் மற்றும் அவர்களை எதிர்த்த புரட்சிப் படைகள் ஆகிய இருபிரிவினருமே, அந்நாட்டின் கொரன்கோசா என்கிற மிகப் பெரிய தேசியப் பூங்காவில் இருந்த வனவிலங்குகளைக் கொன்று குவித்தார்கள். குறிப்பாக ஆயிரக்கணக்கிலான யானைகள் கொல்லப்பட்டு அவற்றின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டன. யானைத் தந்தங்களை விற்று போருக்கான ஆயுதங்களை வாங்கினர். அதுமட்டுமல்ல ஒட்டகம், காட்டுமான், எருமை போன்ற விலங்குகள் உணவுக்காகக் கொன்று குவிக்கப்பட்டன. வனவிலங்குகளின் சொர்க்கமான கொரன்கோசா தேசியப் பூங்காவில் இருந்த 96% பாலூட்டிகள், போரினால் அழிந்தன.போர் காரணமாக இயற்கை வளங்கள் அழியும் சூழ்நிலை உருவாகிறது.இயற்கையோடு இணைந்து வாழும் விலங்குகள் இந்த முரணால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இயற்கையை அழிக்கும் போர்!போரின் காரணமாக காற்று, தண்ணீர் போன்ற இயற்கை வளங்கள் மாசடைகின்றன. குறிப்பாக நிலத்தில் புதைக்கப்படும் கண்ணிவெடிகளால் விலங்குகள் உடல் சிதறி இறந்துபோகின்றன. மொத்தத்தில் போரானது மனிதர்கள்,விலங்குகள்,தாவரங்கள் என்று ஒன்றுவிடாமல் அத்தனையையும் அழித்துவிடுகிறது.எனவே போரை வேருடன் சாய்ப்பது ஒன்றே தற்போதைய அவசியத் தேவையாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !