ரவி வர்மன் கண்ட புது வண்ணம் (28.4.1848 - 6.10.1906)
உங்களுக்குத் தெரிந்த ஓவியரின் பெயரைச் சொல்லுங்கள்! என்று கேட்டால் அனேகமாக 'ராஜா ரவிவர்மா' என்ற பெயரே பதிலாகக் கிடைக்கும். பெயரில் ராஜா என இருப்பதால் அவரைப் பலரும் அரசராகவே நினைப்பார்கள். அவர் அரசராக இல்லாவிட்டாலும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். கேரளாவில் அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கிளிமானூரில் பிறந்தார். ரவிவர்மாவின் அம்மா உமாம்பாள், அப்பா நீலகண்டன். ரவிவர்மா மலையாளம் மட்டுமல்லாது சமஸ்கிருதமும் கற்றார். கூடவே ஓவிய ஆர்வம். சின்ன வயசில் அவரது அம்மா நிறைய நிறைய புராணக் கதைகள் சொல்வார். அதைக் கேட்டு வளர்ந்ததுதான் பின்னாளில் அவரது ஓவியங்களில் பிரதிபலித்தது. தனது பதினான்காவது வயதில் திருவனந்தபுரம் அரண்மனைக்கு வந்த ரவிவர்மா தைலவண்ண ஓவியக் கலையைப் பயின்றார். அந்த அரண்மனைக்கு 1868ல் தியடோர் ஜான்சன் என்னும் ஓவியர் வந்தது வர்மாவின் வாழ்வில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரிடம் ஐரோப்பிய ஓவியத்தின் தன்மைகளைப் பயின்றார். அடுத்து அவரது ஓவியங்களில் மாற்றம் உண்டானது. ஆஸ்ட்ரியாவின் வியன்னாவில் நடந்த ஓவியக் கண்காட்சியில் சிறப்பு விருது உட்பட நிறைய பரிசுகள் விருதுகள் பெற்றார். 1894 ல் மும்பையில் அவர் தனது ஓவிய அச்சகத்தை நிறுவினார். அவர் மறைந்து நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இந்திய ஓவியங்களில், குறிப்பாக காலண்டர் படங்களில் அவரது ஓவியங்களின் சாயல் இருந்துகொண்டேயிருக்கிறது. கையில் செங்கோல் பிடிக்காமல், தூரிகை பிடித்ததன் மூலம் மக்கள் மனதில் ராஜாவானார் ரவிவர்மா.