பாடப் புத்தகத்தில் இல்லாத புதிய தனிமங்கள்
உலகில் இதுவரை 120 தனிமங்கள் கண்டறியப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அவற்றில் இயற்கையில் தானாகக் கிடைக்கும் தனிமங்களின் என்ணிக்கை, மொத்தம் 92. மீதி அனைத்தும் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டவை. இவை பெரும்பாலும் கனமான கதிர்வீச்சு உலோகங்கள். அதனால், அவை உருவாக்கப்பட்ட பத்து பதினைந்து நிமிடங்களிலேயே, சிதைந்து வேறு தனிமங்களாக உருமாறிவிடும். உண்மையில் இவை கண்டுபிடிக்கப்பட்டதை நிரூபிப்பதே கடினம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இரு நூற்றாண்டுகளாகப் பல விஞ்ஞானிகள், தனிமங்களை வரிசைப்படுத்தி தனிம அட்டவணையைத் தயாரித்து இருக்கிறார்கள். டிமிட்ரி மெண்டலீவ் என்ற ரஷ்ய விஞ்ஞானி, 1869 ஆம் ஆண்டில், அதுவரை கண்டுபிடிக்கப்பட்டு இருந்த 63 தனிமங்களை வரிசைப்படுத்தினார். இவரது முயற்சி காலாகாலத்துக்கும் பயன்படக்கூடிய, மிக அடிப்படையான ஒரு வேதியியல் முயற்சி. மெண்டலீவ், தனிமங்களை அடுக்குவதற்கு அவற்றின் பண்புகளையும், அவற்றின் அணுக்கருவில் இருக்கும் புரோட்டான்களின் எண்ணிக்கையையும் அடிப்படையாக எடுத்துக் கொண்டார். கண்டுபிடிக்க வேண்டிய உலோகங்களின் அணு எண், இன்னன்னது என்று அறுதியிட்டுச் சொல்லி, அவற்றுக்காகத் தனது அட்டவணையில் இடங்களைக் காலியாக விட்டிருந்தார். அந்த இடங்களுக்கு உரிய உலோகங்கள் எல்லாம் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, அட்டவணையில் சேர்க்கப்பட்டன. கடந்த 2016 ஜனவரி 7ஆம் தேதி அன்றுகூட, IUPAC (International Union of Pure and Applied Chemistry - பன்னாட்டு தூய மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்) என்ற அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள், நான்கு புதிய தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை உறுதி செய்து, தனிம அட்டவணையைப் புதுப்பித்தார்கள். ('நமது பாடப்புத்தகம் புதுப்பிக்கப்பட வேண்டுமே!' என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் எங்களுக்குப் புரிகிறது!) அவற்றில் உனுன்ட்ரியம் (Ununtrium) எனும் தனிமத்தின் அணு எண் 113. உனுன்பென்ட்டியம் (Ununpentium) எனும் தனிமத்தின் அணு எண் 115. உனுன்செப்ட்டியத்தின் (Ununseptium) எண் 117, உனுன்ஆக்ட்டியத்தின் (Ununoctium) எண் 118. இடையில் வரும் 114 என்ற எண்ணுக்குரிய தனிமமும், 116 என்ற எண்ணுக்குரிய தனிமமும் கண்டுபிடிக்கப்பட்டதா இல்லையா என்ற கேள்வி வரும். அவை இரண்டும் (ஃபிளேவோரியம் - Flevorium 114, லிவர்மோரியம் - Livermorium 116), 2011 ஆம் ஆண்டிலேயே சேர்க்கப்பட்டன. இதுவரை ஒழுங்குபடுத்தப்பட்ட அட்டவணைகளிலேயே மிகவும் நேர்த்தியானது, வேதியியல் தனிமங்களின் அட்டவணைதான் என்று அறிஞர்கள் புகழ்கிறார்கள். இந்தப் பிரபஞ்சம் உருவாவதற்கு அடிப்படையான தனிமங்களை, அவற்றின் பண்புகள் அடிப்படையிலும், எடையின் அடிப்படையிலும் வரிசைப்படுத்தும் தனிம அட்டவணை நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று! அதை வெறும் வேதியியல் விவகாரம் என்று ஒதுக்கக்கூடாது!