அகிம்சை பட்டு!
ஒரு பட்டுப் புடவை நெய்ய சுமார் 50,000 பட்டுப்பூச்சிகளைக் கொல்ல வேண்டும். 'இவ்வளவு பூச்சிகளைக் கொன்று நெய்யும் பட்டாடை தேவையா?' என்ற கேள்வி எழுகிறது. பட்டுப்பூச்சி கூட்டை உடைத்துக் கொண்டு வெளிவந்தால், கூட்டில் துளை ஏற்பட்டு, சுற்றி இருக்கும் பட்டு இழை சிதையும். இதனால், கொதிக்கும் நீரில் கூடுகளைப் போட்டுப் பூச்சிகளைக் கொன்றுவிட்டு, பட்டு இழை பிரிக்கப்படுகிறது.பட்டுப்பூச்சிகளைக் கொல்லாமலும் பட்டு உற்பத்தி செய்யலாம் என்று நிரூபித்து இருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த குசுமா ராஜையா (Kusuma Rajaiah) என்பவர். இந்தப் புதிய முறையில் பூச்சிகள் கூட்டைவிட்டு வெளியேறிய பிறகே, பட்டு இழை பிரித்து எடுக்கப்படும். கூட்டில் துளை ஏற்படுவதால் இழை துண்டிக்கப்பட்ட நிலையில் மிருதுவாக இருக்கும். இந்தத் துண்டு இழைகள் கவனமாகப் பிரித்து ஒன்றிணைக்கப்படுகிறது. கொல்லாமை எனும் அறவழியில் உருவாக்கிய பட்டு அல்லவா? அதனால் அகிம்சைப் பட்டு என்று அழைக்கப்படுகிறது. 1. ஒரு பட்டுப்பூச்சி 500 முட்டைகள்வரை இடும்.2. முட்டைகளில் இருந்து 10 நாட்களில் பட்டுப்புழுக்கள் வெளிவரும்.3. இந்தப் புழுக்கள் மல்பெரி இலைகளைத் தின்று, சுமார் 4 வாரங்களுக்குள் 10,000 மடங்கு எடை கூடும். 4. வளர்ச்சி அடைந்த புழுவின் தலையில் ஒரு வகைப் பிசின் சுரந்து பட்டு இழையாக மாறும். இந்த இழையைக் கொண்டு, பட்டுப் புழு தன்னைச் சுற்றி ஒரு கூட்டைக் கட்டத் தொடங்கும். வெறும் 2, 3 நாட்களில் அந்தக் கூட்டைச் சுற்றி அரை கிலோ மீட்டர் நீளத்திற்குப் பட்டு இழை உருவாகிவிடும். 5. கூட்டுக்குள், பட்டுப்புழு, இறக்கைகள் உடைய பட்டுப்பூச்சியாக உருமாறிக் கொண்டிருக்கும்.6. 10 நாட்களில் கூட்டை உடைத்துக்கொண்டு பூச்சி வெளிவரும்.