நொதுமலாட்டி
தெருவோரங்களில், கோயில் இருக்கும் முனைகளில் பெண்கள் கூடைகளில் பூப்பரப்பி விற்பனை செய்வதை பார்த்திருப்பீர்கள். சரி, பெண்கள் பூக்களை இந்தக் காலத்தில் மட்டும்தான் விற்பனை செய்கிறார்களா? சங்க காலத்தில் இதுபோல் பூ விற்பனை செய்யும் பழக்கம் இருந்ததா என்றால், இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.சங்க கால மகளிர் தங்களின் வருவாயைப் பெருக்க உப்பு விற்றனர், மீன் விற்றனர், தயிர், மோர் விற்றனர் என அறிந்திருக்கிறோம். அதுபோன்றே பூக்களையும் விற்றிருக்கிறார்கள்.துகிலிகை யன்ன துய்த்தலைப் பாதிரிவாலிதழ் அலரி வண்டுபட ஏந்திப்புதுமலர் தெருவுதொறும் நுவலும்நொதுமலாட்டி' (நற்றிணை - 118) இந்தப் பாடல், தலைவி தோழியைப் பார்த்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது. பாடலைப் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ. 'தலைவன் நம்மை மறந்ததற்காக வருந்துவது போல், தலைவன் இல்லாத காலத்தில், மெல்லிய பாதிரி, அலரி மலர்களை விற்பனை செய்பவளை பார்த்ததும் என் நெஞ்சு வருந்துகிறது' என்று தலைவி கூறுகிறாள்.பாதிரிப் பூவையும், அலரிப் பூவையும் வண்டுகள் சுற்ற, அதை தட்டிலேந்தி தெருவெல்லாம் மணக்க நொதுமலாட்டி எனப்படும் பூக்காரி, பூவை விற்பனை செய்திருக்கிறாள்.அதே நற்றிணையில் பாண்டிய மன்னன் மாறன் வழுதி பாடியதாக ஒரு பாடல்.'துய்த்தலை இதழபைங் குருக்கத்தியொடுபித்திகை விரவுமலர் கொள்ளீரோ எனவண்டு சூழ் வட்டியள் திரிதரும்தண்டலை யுழவர் தனிமடமகள்' (நற்றிணை - 97)தேன் உண்ணும் வண்டுகள் மொய்த்துக்கொண்டிருக்கும் கூடையில் (வட்டி), பூவை வைத்துக்கொண்டு திரிகிறாள் உழத்தி மகள். வாயகன்ற அக்கூடையில், குருக்கத்திப் பூவும், பித்திகைப் (மல்லிகையில் ஒரு வகை) பூவும் மணம்பரப்ப, தெருவில் கூவி விற்பனை செய்கிறாள் அப்பெண்.காலம்தோறும் பூக்கள், தெருக்களை மணத்தால் நிரப்பி இருக்கின்றன இல்லையா!