உள்ளூர் செய்திகள்

காரணம் ஒன்று உபயோகம் பல...

கிரிக்கெட் விளையாட்டில் 'விலகு சுழல் வீச்சு' (Spin - off) என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்! அதைப்போலவே தொழில்நுட்பத்திலும் Spin Off Technology என்று உள்ளது. ஒரு பொருளைக் கண்டுபிடித்த காரணம் ஒன்றாக இருக்கும். அதைப் பிற வழிகளில் பயன்படுத்துவதை இது குறிக்கிறது. என்ன என்று பார்க்கலாம்! அன்றாடம் பயன்படுத்துகிற பல பொருட்களின் கண்டுபிடிப்புக்குக் காரணமாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் 'நாசா' (NASA) உள்ளது. கிட்டத்தட்ட 6300 கண்டுபிடிப்புகளுக்கு நாசா காப்புரிமை (Patent) பெற்றுள்ளது. இவற்றில் 1800 கண்டுபிடிப்புகள் Spin Off Technology ஆகப் பயன்படுகிறது. அப்படிப்பட்ட பொருட்களில் சிலவற்றைப் பார்ப்போம்!நீர் வடிகட்டி (Water Filter): விண்வெளி செல்லும் வீரர்களுக்கு சுத்தமான குடிநீர் தேவை. பாக்டீரியா, உடல் நலக்குறைவு ஏற்படாமல் இருக்க விண்வெளி வீரர்களுக்கு நீரைச் சுத்திகரித்துக் கொடுக்க நாசா ஒரு நீர் வடிகட்டியை உருவாக்கியது. கரி, வெள்ளி அயனி இவற்றின் மூலமாக வடிகட்டப்படும் நீர் சுத்தமாகவும், பாக்டீரியாவை நீக்கி, புதிய பாக்டீரியா உருவாகாமல் தடுப்பதாகவும் இருந்தது. இதை அடிப்படையாக வைத்துதான் நாம் தற்போது உபயோகப்படுத்தும் நீர் வடிகட்டிகள் உருவாக்கப்பட்டன.கீறல் விழாத கண்ணாடி லென்ஸ் (Scratch Resistant Lenses): தற்போது பிளாஸ்டிக் இழைகளால் (Fibre) ஆன மூக்குக் கண்ணாடி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இவை விலை குறைவு, எடையும் குறைவுதான். பாதுகாப்பானது. ஆனால் பிளாஸ்டிக் மூக்குக் கண்ணாடிகளில் கீறல் விழ வாய்ப்பு உள்ளது. கீறல் விழாத பிளாஸ்டிக் கண்ணாடிகளைச் செய்வதில் நாசா கண்டுபிடிப்பு பயன்பட்டது. விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் தலைக்கவசம் மாசு படியாமல் தெளிவாக இருக்க கார்பன் (Carbon), சிலிகான் (Silicon) கலந்து உருவான மேற்பூச்சு பயன்படுத்தப்பட்டது. இந்த மேற்பூச்சை பிளாஸ்டிக் மூக்கு கண்ணாடிகளில் பயன்படுத்தி கீறல்கள் ஏற்படாத மூக்குக் கண்ணாடி உருவாக்கப்பட்டது. கம்பியில்லா துளையிடு கருவி (Cordless Driller): அப்பல்லோ (Appollo) விண்கலத்தை 1960ல் வானில் செலுத்தியபோது நிலவின் மேற்பரப்பில் ஆழமாகத் தோண்டக்கூடிய சிறிய, எடை குறைவான கருவி தேவைப்பட்டது. அதற்காக மின்கலத்தின் சக்தியால் இயங்கக்கூடிய கம்பிகளற்ற துளையிடும் கருவி உருவாக்கப்பட்டது. பிற்காலத்தில் பல கம்பிகளற்ற கருவிகள் செய்ய இதுவே காரணமாக அமைந்தது.பிளாஸ்டிக் மெத்தை (Plastic Foam): விண்கலங்களில் பயணிக்கும் விண்வெளி வீரர்கள் அமரும் இருக்கைகள் Open Cell Polyurethane Silicon என்ற பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டது. இது நாசாவின் கண்டுபிடிப்பு. சாதாரண இருக்கைகளைவிட இந்த இருக்கைகள் பத்து மடங்கு அழுத்தம் தாங்கக்கூடியவை. எவ்வளவு அழுத்தப்பட்டாலும் மீண்டும் பழைய இயல்பு நிலைக்கு வந்துவிடும் என்பதே இதன் சிறப்பு. இந்த முறையைப் பயன்படுத்தி விமானம், கார், பேருந்து, இரு சக்கர வாகனங்கள், உறங்கும் மெத்தைகள் என பல அன்றாட உபயோகப் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.புகையறியும் கருவி (Smoke Detector): விண்வெளி ஆய்வுக்கூடங்களில், விண்கலங்களில் வாயுக்கசிவு ஏற்பட்டால் அதைத் தெரிந்துகொள்வதற்கான கருவியை நாசாதான் முதன்முதலில் கண்டுபிடித்தது. வாயுக் கசிவு கண்டறியும் கருவியின் தொழில்நுட்பமே புகை கண்டறியும் கருவியில் பயன்படுகிறது. இன்று பெரிய கட்டடங்களில் பொருத்தப்படுகிற புகை கண்டறியும் கருவி தீ விபத்துகளைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.காது வெப்பமானி (Ear Thermometer): வெப்பமானி (Thermometer) நம்மில் பெரும்பாலானவர்கள் வீட்டில் இருக்கும். வெப்பமானியை நாக்கின் அடியில் வைத்துப் பார்த்து காய்ச்சல் அளவைத் தெரிந்து கொள்ளலாம். இதில் உள்ள பாதரசம் நச்சுத்தன்மை உடையது. இதற்கு மாற்றாக உதவியது நாசாவின் கண்டுபிடிப்பு. நட்சத்திரங்களின் வெப்பநிலையை அறிந்து கொள்ள 'இன்ஃபிராரெட்' வெப்பமானியை (Infrared Thermometer) நாசா உருவாக்கி உபயோகப்படுத்தியது. இதை அடிப்படையாக வைத்து காது வெப்பமானி உருவாக்கப்பட்டது. இந்த வெப்பமானியைக் காதுப் பகுதியில் வைத்துப் பார்ப்பதன் மூலம் உடனடியாக, காய்ச்சல் அளவைத் தெரிந்துகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !