உள்ளூர் செய்திகள்

இயற்கை வேளாண்மை - ஒரு பார்வை!

செயற்கை உரம், செயற்கைப் பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள் போன்றவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். பயிர்சுழற்சி முறைகளைப் பின்பற்றவேண்டும். அடுத்து, பசுந்தாள் உரம், மண்புழு உரம், தென்னை நார்க்கழிவு உரம், கரும்புத் தோகை உரம், மக்கிய இயற்கை உரம், உரமேற்றிய தொழுஉரம், வேப்பெண்ணெய் மற்றும் வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றை வைத்து, இயற்கை முறையில் விவசாயம் செய்வதை நாம் இயற்கை வேளாண்மை என்கிறோம்.ஒவ்வொரு பயிர் வளர்வதற்கும் அடிநாதமாக இருப்பது விதைகள். எனவே, தரமான நாட்டு விதைகளைப் பயன்படுத்தி நெல் உட்பட பல தானியங்களை விளைவிப்பதே, இயற்கை வேளாண்மையின் அடிப்படை நோக்கம்.இயற்கை வேளாண்மை நன்மைகள்:இந்த முறை விவசாயத்தில், ஆரோக்கியமான, தூய உணவுப் பொருட்களைப் பெறலாம். அப்படிப் பெறப்படும் உணவுப் பொருட்கள் மிகுந்த ருசியுடனும் இருக்கும் என்கிறார்கள். அதோடு, விவசாயச் செலவு குறைந்து, உற்பத்தி மற்றும் லாபம் அதிகரிக்கும் என்றும் இயற்கை முறையில் பயிரிடும் விவசாயிகள் கூறுகின்றனர். பூச்சிக்கொல்லிகள் இன்றி விவசாயம் செய்ய முடியாது என பல விவசாயிகள் கூறிவந்தனர். அவர்களுக்கு மத்தியில் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விளைவிக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் அதிகரித்துள்ளது.மண்ணில் தேவையற்ற உரங்கள் போடாமல், பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்காமல் இருப்பதாலும், மண்ணின் சத்துகள் பாதுகாக்கப்படுகின்றன. மண்ணின் மலட்டுத்தன்மையைக் குறைக்க இயற்கையான முறைகளைத் தேர்வு செய்யுங்கள் என்றார் மறைந்த இயற்கை விவசாயி நம்மாழ்வார். இந்தியாவில் தற்போது இயற்கை முறையில் வேளாண்மை செய்வதை ஊக்குவிக்க பல தன்னார்வ அமைப்புகள் பெருகிவிட்டன. இந்த அமைப்புகளில் பலரும் தங்கி, நேரடிப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இயற்கை விவசாயத்தில் எதிர்பார்த்த அளவு அதிக மகசூல் கிடைக்காது என்கிற பொதுவான கருத்து உள்ளது. ஆனால், இந்தக் கருத்தையும் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் மாற்றிக் காட்டியிருக்கிறார்கள். தமிழகத்தில், பாரம்பரிய நெல் ரகங்களைச் சேகரிக்க பலரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். இச்செயலில் மிகமுக்கியமானவர் நெல் ஜெயராமன். இவர் தமிழகத்தின் பாரம்பரிய நெல் விதைகளைச் சேகரித்து, பலரையும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்த வைத்தார். அடுத்து, நமக்குக் கிடைத்த நெல் விதைகளை கூடுதலாக உற்பத்தி செய்ய முடியுமா? மக்களுக்குத் தேவையான விளைச்சலைக் கொடுக்க இயலுமா என்பன போன்றவற்றுக்கு வரும்காலம் தான் விடை சொல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !