உள்ளூர் செய்திகள்

வலிமிகுதல் - பகுதி - 3: முற்றியலுகரம் வலி மிகும்

ஒரு சொல்லுக்குக் கடைசி எழுத்தாக கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உயிர்மெய் உகர எழுத்துகளில் ஏதேனும் ஒன்று வந்தால், அது குற்றியலுகரச் சொல். கொக்கு, பஞ்சு, பாட்டு, பத்து, பாம்பு, காற்று ஆகிய சொற்களின் கடைசி எழுத்துகளை நோக்குங்கள். அவை, கு, சு, டு, து, பு, றுஆகிய ஆறு எழுத்துகளில் ஒன்றாக இருக்கின்றன. அதனால் அச்சொற்கள் குற்றியலுகரச் சொற்கள்.அவ்வாறு வரும் எல்லாச் சொற்களும் குற்றியலுகரம் ஆகிவிடுவதில்லை. தனியாக ஒற்றைக் குறில் எழுத்தை அடுத்து கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு எழுத்துகளில் ஒன்று வந்தால், அச்சொல் குற்றியலுகரம் ஆகாது. பசு, நடு, பொது, புது, மது ஆகிய சொற்களை எடுத்துக்கொள்ளுங்கள். இச்சொற்களின் ஈற்றெழுத்துகள் கு, சு, டு, து, பு, று ஆகியவற்றில் ஒன்றாக இருப்பினும், தனிக் குறிலெழுத்தை அடுத்துத் தோன்றியமையால் இவை குற்றியலுகரம் ஆகவில்லை. ஒலியில் குறுகாமல் முழுமையாகவே ஒலிப்பதால், இவை முற்றியலுகரங்கள் எனப்படும்.தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் உகர ஈற்றுப் பெயர்ச்சொற்களை அடுத்து வல்லினத்தில் தொடங்கும் சொற்கள் வந்தால் அங்கே கட்டாயம் வலிமிகும்.பசு + தோல் = பசுத்தோல்பொது + பணி = பொதுப்பணிநடு + காடு = நடுக்காடுமது + கடை = மதுக்கடைகு,சு,டு,து,பு,று அல்லாத பிற உகர உயிர்மெய் எழுத்துகளும் தனிக்குறிலை அடுத்து வந்து ஒரு சொல்லாகத் தோன்றும்தானே? முழு, விழு, குழு, திரு, பளு, தெரு, அணு ஆகிய சொற்களைப் பாருங்கள். அவை தனிக்குறிலை அடுத்து கு,சு,டு,து,பு,று அல்லாத உகர ஈற்று உயிர்மெய் எழுத்துகளோடு இருக்கின்றன. அவையும் முற்றியலுகரங்களே. அவற்றுக்கும் வருமொழி வல்லினத்தில் தொடங்கினால் கட்டாயம் வலிமிகும்.முழு + தகுதி = முழுத்தகுதிவிழு + புண் = விழுப்புண்குழு + பாடகன் = குழுப்பாடகன்திரு + கோவில் = திருக்கோவில்பளு + போட்டி = பளுப்போட்டிதெரு + கூட்டம் = தெருக்கூட்டம்அணு + குண்டு = அணுக்குண்டுநம்மில் பலரும் அணுகுண்டு என்று வலிமிகுவிக்காமல் எழுதிக்கொண்டிருக்கிறோம். அணுக்குண்டு என்று எழுதுவதே சரியானது. அதனைப் போலவே 'பசும்பால்' என்றும் எழுதுவதுண்டு. 'பசும்பால்' என்றால் காய்ச்சப்படாத அனைத்து வகை பச்சைப் பாலையும் (ஆடு, எருமை) குறிக்கும். 'பசுப்பால்' என்பதுதான் பசுவிடமிருந்து கறந்த பாலைக் குறிக்கும். தனிக்குறிலை அடுத்து உகர உயிர்மெய் எழுத்து வருகின்ற பெயர்ச் சொற்களுக்கு வலிமிகும் என்பதை நினைவில் கொள்க. - மகுடேசுவரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !