வலி மிகுதல் 13 - தொடர்களின் வகைகள்
இரண்டு சொற்கள் சேர்ந்து வருவது சொற்றொடர் எனப்படும். சொற்கள் அடுத்தடுத்துத் தொடராக வருகின்றன என்னும் பொருளில் சொல் + தொடர் = சொற்றொடர் ஆயிற்று. தனிச் சொல்லானது ஒரு சொல்லுக்குரிய பொருளை மட்டுமே தரும். பல சொற்களைச் சேர்த்துச் சொற்றொடராக அமைத்துத்தான் வெளிப்படுத்த வேண்டிய பொருளைத் தெளிவாக உணர்த்த முடியும். (கண்ணன் வந்தான்)ஒரு சொற்றொடர், இரண்டு சொற்களால் ஆகியிருக்கும். இரண்டுக்கும் மேற்பட்ட சொற்களால் அடுத்தடுத்துத் தொடர்ந்து பொருளுணர்த்திச் செல்லும். ஒரு சொற்றொடர் முற்றுப்பெற்று முழுமையான பொருளை உணர்த்தும்போது, அதை 'வாக்கியம்' என்கிறோம். (கண்ணன் பள்ளிக்கு வந்தான்)இரண்டு சொற்களுக்கிடையே எங்கே வலி மிக வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க, அவ்விரண்டு சொற்களும் எத்தகையது என்று பார்க்க வேண்டும். இரண்டு சொற்கள் அடுத்தடுத்து வந்தால், அதைச் சொற்றொடர் என்று அழைப்பது நமக்குத் தெரியும். சொற்றொடரைச் சுருக்கமாகத் 'தொடர்' என்று சொல்வார்கள். பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியவை அடுத்தடுத்து வந்து சொற்றொடர்களை (சுருக்கமாகச் சொன்னால் தொடர்களை) உருவாக்குகின்றன. ஒரு சொல்லை அடுத்து வரும் இன்னொரு சொல்லுக்கேற்ப தொடர்கள் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. பெயர்ச்சொல்-: வள்ளிவினைச்சொல்: -சிரித்தாள்இடைச்சொல்-: எ-டு ஒடு, ஓடு (கண்ணனொடு, இராதையோடு)உரிச்சொல்-: நனி(நனி சிறந்தது)பெயரும் வினையும் வந்தால் அத்தொடருக்கு ஒரு பெயர். வினையும் பெயரும் வந்தால் அதற்கு ஒரு பெயர். உரியும் பெயரும் வந்தால் அதற்கு ஒரு பெயர். இப்படித் தொடர்கள் ஒன்பது வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.ஒரு தொடரில் எங்கே வலி மிகும், எங்கே வலி மிகாது என்பதைத் தெரிந்துகொண்டால் போதும். தவறே செய்ய மாட்டோம். எந்தெந்தத் தொடருக்கு வலி மிகும், எந்தெந்தத் தொடருக்கு வலி மிகாது, விதிவிலக்காக எப்போது வலி மிகும் என்கின்ற பாடத்தைக் கற்றால் போதும். வலி மிகுதல் தொடர்பான அறிவின் பெரும்பகுதியைப் பெற்றுவிடலாம்.அதற்குச் சொற்றொடர்களின் வகைகளைத் தெரிந்து கொள்வோம். கீழ்க்காண்பவைதாம் தொடர்களின் ஒன்பது வகைகள்:1. எழுவாய்த் தொடர்2. விளித்தொடர்3. வினைமுற்றுத் தொடர்4. வினையெச்சத் தொடர்5. பெயரெச்சத் தொடர்6. இடைச் சொற்றொடர்7. உரிச் சொற்றொடர்8. அடுக்குத் தொடர்9. வேற்றுமைத் தொடர்- மகுடேசுவரன்