உள்ளூர் செய்திகள்

வலி மிகுதல் பகுதி 25 - உரிச்சொற்றொடர்களில் வலி மிகுமா?

பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள், இடைச்சொற்கள் ஆகியவற்றை அடுத்து இருப்பவை உரிச்சொற்கள். சால, உறு, தவ, நனி, கூர், கழி, கடி, தட, மா ஆகியன உரிச்சொற்கள். உரிச்சொல் பயின்று வரும் தொடர்கள் யாவும், உரிச்சொற்றொடர்கள்.உரிச்சொல்லானது தனியாக வருவதில்லை. ஒரு பெயர்ச்சொல்லையோ வினைச்சொல்லையோ ஒட்டித்தான் வரும். அவ்வாறு உரிச்சொல் பயின்று வரும் சொற்றொடர்களில், வலி மிகுமா, மிகாதா என்பதைப் பார்க்கலாம். உரிச்சொற்களைப் பொறுத்தவரையில், அத்தொடர் வருகின்ற இடத்திற்கேற்ப, வலி மிகுந்தோ, மிகாமலோ வரும். உரிச்சொல்லின் பொருள் கெடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.சால, தவ, தட, மா ஆகிய உரிச்சொற்களுக்கு வலி மிகுவது வழக்கமாக இருக்கிறது. 'சாலச்சிறந்தது,' 'தவப்பெரிது' ஆகிய தொடர்கள் எடுத்துக்காட்டுகள். 'மாக்கடல்' என்று வலி மிகுகிறது. தட என்னும் உரிச்சொல்லைப் பயன்படுத்தினால், 'தடந்தோள்' என்று வரும். இத்தகைய பயன்பாடுகளைப் பழக்கத்தினால் அறிந்து கொள்ள வேண்டும். உறு, நனி, கூர், கழி ஆகிய சொற்களுக்குப் பெரும்பாலும் வலி மிகுவதில்லை. 'உறுபசி, நனிசிறந்தது, கூர்பார்வை, கழிபேருவகை' ஆகிய உரிச்சொற்றொடர்களில் வலி மிகவில்லை. உரிச்சொல்லுக்கென்று தனியான பொருள் ஏதுமில்லை. அச்சொல் எதையொட்டி வருகிறதோ அப்பொருளை வலிமையாக்கிக் கூறுவதாகவே கொள்ள வேண்டும். நனிசிறந்தது என்றால் 'மேலும் நன்கு சிறந்தது' என்று பொருள். மேற்சொன்னவை யாவும், மிகுதி என்னும் தன்மையைக் குறித்த உரிச்சொற்கள்.உரிச்சொற்களில் 'கடி' என்ற சொல் இருக்கிறது. 'கடிநகர், கடிமனை' என்று வந்தால் காவல் வலிமையை உணர்த்தும். கடி என்பது காவல் குறித்த உரிச்சொல்லாகக் கருதலாம்.ஓசை குறித்த உரிச்சொற்களில் இமிழ், ஒலி, கலி, கனை, குரை போன்ற பல சொற்களைக் கூறுகிறார் நன்னூலார். இவற்றிற்கும் எங்கும் வலி மிகுவதில்லை. இமிழ்கடல், ஒலிபுனல், கலிகெழுமூதூர், கனைகடல், குரைபுனல், என்று வலி மிகாமல் வருகின்றன. உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரித்தானவையாக மாறிவிட்டன. அதனால், இன்றைய உரைநடை ஆசிரியர்கள், உரிச்சொல் பயன்பாடுகளை அறியாதவர்களாக இருக்கிறார்கள். உரிச்சொற்களை உரிய இடங்களில் பயன்படுத்தினால் நம் எழுத்து சிறப்படையும். - மகுடேசுவரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !