உள்ளூர் செய்திகள்

அலுவலகமாக மாறிய அரண்மனை!

18ம் நூற்றாண்டில், வட ஆற்காடு, தென் ஆற்காடு, திருச்சி, திருநெல்வேலி, நெல்லூர் (ஆந்திர மாநிலம்) உள்ளிட்ட பகுதிகள் கர்நாடக நவாபின் தலைமையின் கீழ் இருந்தன. நவாபின் தலைநகரம் ஆற்காடு என்பதால், ஆற்காடு நவாப் என அழைக்கப்பட்டார். 1749ல், நவாப் குடும்ப வாரிசுகளுக்குள் ஆட்சி அதிகாரத்துக்கான போட்டி ஏற்பட்டது. பிரெஞ்சுக்காரர்கள் ஒருதரப்பையும், ஆங்கிலேயர்கள் மற்றொரு தரப்பையும் ஆதரித்தனர். போரில் 'ராபர்ட் கிளைவ்' (Robert Clive) தலைமையிலான ஆங்கிலேயப் படை வெற்றி பெற்றது. அவர்களை ஆதரித்த வாலாஜா முகமது அலி, ஆற்காடு அரியணையைப் பிடித்தார். தலைமையகத்தை, சென்னைக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது.செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் 117 ஏக்கர் நிலம் வாங்கி, கோட்டை கட்டப்பட்டது. 1768-ம் ஆண்டு, பால் பென்ஃபீல்ட் (Paul Benfield) என்ற கட்டடக் கலை வல்லுநர் அரண்மனையைக் கட்டும் பணியைத் தொடங்கினார். கிழந்திந்திய கம்பெனியின் ஆலோசகரான இவர்தான், இந்தோ- அரபிய கட்டட முறையை இந்தியாவிற்கு முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தவர். அரண்மனையில், ஹுமாயுன் மகால், கால்சா மகால் என இரு வளாகங்கள் உண்டு. இதில் கால்சா மகால் இரண்டு மாடி கட்டடம், ஹுமாயுன் மகால் ஒரு மாடி கட்டடம். அதில் இரண்டு மாடி அளவு உயரத்தில் குவிமாடம் (Dome - -டோம்) அமைந்துள்ளது. 18ம் நூற்றாண்டின் மிகப்பெரிய குவிமாடம் இதுதான். இப்போதைய சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் கட்டடம்தான், அரண்மனையின் நுழைவாயில். சென்னை பல்கலைக்கழகம் இருக்கும் பகுதிதான் அரண்மனையின் நீச்சல் குளம். திருவல்லிக்கேணி காவல் நிலையம் கூட, அரண்மனையின் ஒரு பகுதிதான். யானை, குதிரை லாயம் என சகல வசதிகளுடன் அரண்மனை வடிவமைக்கப்பட்டது. மிகப்பெரும் பொருட்செலவு ஏற்பட்டதால், ஆங்கிலேயர்களிடம் நவாப் கடன் வாங்கினார். கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், கர்நாடகத்தில் வரிவசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர்களுக்கு விட்டுக் கொடுத்தார். நவாப் முகமது அலி இறந்தபின், கடனைக் கட்டமுடியாத அவருடைய மகன், அரண்மனையை விட்டு வெளியேற்றப்பட்டார். 1801ல் ஏலத்திற்கு வந்த அரண்மனையை யாரும் வாங்கவில்லை. அதனால், அரசுடைமை ஆக்கப்பட்டது. அக்கட்டடத்தை அரசு அலுவலகத்துக்கு தேவையான வகையில் மாற்றி அமைக்கும் பொறுப்பு கட்டடக் கலை நிபுணர் ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Chisholm) வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர், ஸ்காட்டிஷ் (Scottish) முறையில் கட்டடத்தை மாற்றினார். ஓர் அரண்மனை, ஆட்சியாளரின் ஊதாரித்தனத்தால் தன் அந்தஸ்தை இழந்து, அரசு அலுவலகமாக மாறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !