உள்ளூர் செய்திகள்

நான் யார்?

'ஜப்பானில் 1928இல் பிறந்தேன். எனது தந்தை ஆனந்த் மோகன் சஹாய். ஜப்பானில் இருந்து இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக உழைத்தவர். இந்தியா சுதந்திர தேசமாக வேண்டும் என்று பாடுபட்ட, ராஷ் பிஹாரி போஸின் நெருங்கிய நண்பர் என் தந்தை. ஜப்பான் பள்ளியில், அந்த நாட்டு மொழியைக் கற்று, வளர்ந்தாலும், இந்தியாவுக்காக, அதன் விடுதலைக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று, என் இதயம் துடித்துக்கொண்டிருந்தது. 1943இல் ஜப்பான் வந்த நேதாஜியைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவரைக் கண்டதும் மரியாதை நிமித்தமாகக் காலைத் தொட்டு வணங்கச் சென்றேன். அவரோ தடுத்து நிறுத்தி, திட்டினார். 'நீண்ட காலமாக நாடு அடிமைத்தனத்தில் இருக்கிறது.பெண்கள் சாதிக்க வேண்டியது நிறையவே உள்ளது.' என்று அறிவுரை கூறினார். தாய்லாந்தின் பாங்காக்கில் இந்தியத் தேசிய ராணுவத்தின் (INA) ஜான்சி ராணி படைப்பிரிவு அமைக்கப்பட்டபோது, அதில் சேர விரும்புவதாக என் தந்தையிடம் கூறினேன். அவர் சம்மதத்துடன் 1945இல், இந்தியத் தேசிய படைப்பிரிவில் நான் சேர்ந்தேன். நான்கு மாத பயிற்சியின் போது, பாங்காக்கிலிருந்து ரங்கூனுக்கு அணிவகுத்துச் சென்றோம். பயிற்சியின் போது துப்பாக்கிகளைச் சுடுவதற்குக் கற்றுக்கொண்டோம். போர் விமானங்களைத் தாக்குவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. அமெரிக்க விமானங்கள் எங்கள் எல்லைக்குள் வரும்போதெல்லாம், நாங்கள் அதை நோக்கிச் சுட்டோம். நாங்கள் தியாக உணர்வால் வளர்க்கப்பட்டோம். நாட்டு விடுதலைக்காக எங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தோம். இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த பிறகு, நான் சிறையில் அடைக்கப்பட்டேன். என் தந்தையும் சிங்கப்பூரின் பியர்ல் ஹில்ஸ் (Pearls Hill prison) சிறையில் அடைக்கப்பட்டார். போருக்குப் பின், 1946இல் தந்தையுடன் இந்தியா திரும்பினேன்.தற்போது பீகாரில் என் குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன். போரின் போது ஜப்பான் மொழியில் நான் எழுதிய நாட்குறிப்புகள், ஜப்பான், இந்தி, ஆங்கில மொழிகளில் புத்தகமாக வெளிவந்துள்ளன.விடைகள்: ஆஷா சான்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !