சிறு துரும்பு!
சாதனை : சாலை, குடிநீர், தெருவிளக்கு திண்டுக்கல்லிலுள்ள காந்தி கிராம ஊராட்சித் தேர்தலில் சுயேச்சையாக நின்று வென்றவர் டி.ஜெயராம். இவர், 2006 முதல் 2016 வரை, காந்தி கிராம ஊராட்சித் தலைவராகப் பதவி வகித்தார். 'பஞ்சாயத்தில் உள்ள 13 கிராமங்களுக்கும் தேவையான சாலை வசதி, தெருவிளக்கு, வீடுதோறும் குழாய் மூலம் குடிநீர் வழங்குதல் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தேன். சர்வோதயா காலனியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் வசித்த மக்கள், அந்த நிலத்துக்குச் சொந்தமானவரது நிறுவனங்கள், தோட்டங்களில் வேலை செய்து வந்தனர். அந்த நிறுவனரிடம் பேசி, அம்மக்கள் குடியிருந்த இடத்தை அவர்களுக்கே சொந்தமாகும்படி பத்திரப் பதிவு செய்து கொடுத்தேன்.மொத்தமுள்ள 13 கிராமங்களில் 14 மேல்நிலைத் தொட்டிகள் அமைத்தோம். இதன்மூலம் காந்தி கிராமம் ஊராட்சி, குடிநீர் வசதியில் தன்னிறைவு பெற்ற பஞ்சாயத்தாக மாறியது. தூய்மை இந்தியா திட்டத்திற்கு முன்பே எங்கள் பஞ்சாயத்தின் கீழ் வரும் அனைத்து கிராம வீடுகளிலும் கழிப்பறைகள் கட்டிக்கொடுத்தேன். ஊர் மக்களுக்காக மூன்று லட்சம் ரூபாயில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வழிவகை செய்தேன். அனைத்து வீடுகளிலும் கழிவு நீர் உறிஞ்சுகுழி அமைக்க ஏற்பாடு செய்தேன். இதன் மூலம் வீட்டைச் சுற்றி கழிவுநீர் தேங்காமல், சுகாதாரம் மேம்பட்டது. மாவட்ட விளையாட்டுத்துறை உதவியுடன், கிராம இளைஞர்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களையும் வாங்கிக் கொடுத்துள்ளேன். கிராமங்கள் உயர்ந்தால்தானே நாடு உயரும். எங்கள் கிராமம் போதுமான அனைத்து வசதிகளையும் பெற நான் சிறுதுரும்பாக இருந்துள்ளேன்” என்றார் ஜெயராம்.