அலையோடு விளையாடி...
சர்ஃபிங் (Surfing) எனப்படும் நீர் விளையாட்டு கோடையில் சுவாரசியமானது. சென்னையை அடுத்த கோவளத்தில் கோவ்லாங்க் பாயின்ட் (CovelongPoint) எனும் பயிற்சிப்பள்ளி இயங்கி வருகிறது. அதன் முதன்மைப் பயிற்சியாளர் மூர்த்தியிடம் சில கேள்விகள் கேட்டோம். 1. சர்ஃபிங் கற்றுக்கொள்ள என்ன வயது சரியானது? 5 வயது முதலே கற்றுக்கொள்ளலாம். 75 வயதில் கூட என்னிடம் கற்றுக்கொண்டவர்கள் உண்டு. இதனை வெறும் விளையாட்டு என்று பார்க்காமல் கடல் அலையோடு ஏற்படும் ஒரு உறவு என்று பார்க்கவேண்டும்.2. நீச்சல் தெரிந்திருக்க வேண்டுமா?சர்ஃபிங் கற்றுக்கொள்ள நீச்சல் தெரிந்திருக்கவேண்டும். தெரியாதவங்க வந்தால் அவர்களுக்கு இதனுடன் நீச்சலும் சேர்ந்தே கற்றுக்கொடுக்கிறோம். 3. நீங்க எப்போது இதனைக் கற்றுக்கொண்டீர்கள்?நான் இதே பகுதியைச் சேர்ந்தவன். கடலில் மீன் பிடிப்பதும், மரப்பலகைகளைக் கடலில் போட்டு அதில் மிதப்பதும் பிடித்தமான விளையாட்டு. அப்புறம் அதில் நிற்கப் பழகினேன். கடல் அலை என்ன நினைக்கிறது என்று என்னால் சொல்ல முடியும். இந்த சர்ஃபிங்கில் எனக்கு 18 வருஷ அனுபவம். அப்படி இருக்கும் போது, ஒரு முறை இங்கே ஒரு அமெரிக்கர் வந்திருந்தார். அவர் இஸ்கான் சாமியார். அவரு சர்ஃபிங்கில் பெரிய ஆளு. அவர் தன் கையோடு கொண்டுவந்திருந்த பலகையைப் பார்த்து, இரவல் கேட்டேன். முதலில் கொடுக்கவில்லை. நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்ததால் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு, கடலில் குதித்தேன். கொஞ்ச நேரம் அலைகளோடு விளையாடினேன். செம்ம... ஜாலியாக இருந்தது. சர்ஃபிங் பலகையை நான் திருப்பிக் கொடுக்க வரும்போது, 'நீ நல்லா செய்யுற... இதுக்கு முன்னாடி இந்த போர்ட்டை பயன்படுத்தி இருக்கியா?'ன்னு கேட்டாரு. இல்லைன்னு சொன்னேன். 'நல்லா செய்யுற... மரப்பலகைக்கு பதிலா போர்டு வாங்கி பிராக்டீஸ் செய்யுன்'னு சொன்னாரு. நானும் 2003இல் ஒரு போர்டு வாங்கினேன். சுத்தி இருக்கிறவங்க எல்லாம் என்னைய கேலி செஞ்சாங்க. மத்தவங்க பேச்சைப் பத்தி, யோசிக்காமல் நான் பயிற்சி செஞ்சுகிட்டே இருந்தேன். என்னோட எண்ணமெல்லாம் கடல் அலையோடு பேசவேண்டும் என்பதுதான். அது சொல்வதைப் புரிஞ்சுக்க முயற்சி செய்ய ஆரம்பிச்சேன். 4. எப்போது சர்ஃபிங் பள்ளி தொடங்கினீங்க?2012இல் தான் தொடங்கினேன். முன்னாடி சொன்னமாதிரி, சர்ஃபிங் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும்போது, பல வெளிநாட்டவர்களைப் பார்த்தேன். அதில் ஒருவர் 2008இல் எனக்கு ஒரு போர்டு, பரிசு கொடுத்தார்.அதில் இருந்துதான் இங்கே சர்ஃபிங் வளர்ச்சி அடைஞ்சது. புது போர்டை நான் வச்சுகிட்டு, என்னுடைய போர்டு மூலமா, கோவளம் கிராமத்து பசங்களுக்கு சர்ஃபிங் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன். 2009இல் அவர் திரும்ப என்னை பார்க்க வரும்போது 15 பேர் கற்றுக்கொள்வதைப் பார்த்து, சந்தோஷமாயிட்டார். அவரே என்னைய வச்சு ஒரு டாக்குமென்ட்ரி படம் எடுத்தார். அதைப் பார்த்துட்டு, பலரும் உதவ முன் வந்தாங்க. அதுக்கு அப்புறம் தான் 2012இல் இந்த ஸ்கூல் ஆரம்பிச்சேன்.5. இதில் விளையாட்டுப் போட்டிகளும் நடக்குதே?ஆமாங்க. நம்மிடம் பயிற்சி எடுத்துக்கொண்ட பசங்க பல போட்டிகளில் கலந்துக்கிட்டிருக்காங்க. சேகர் பச்சைன்னு ஒரு பையன் உலக அளவில் கலந்துகொண்டு இருக்கான். போன வருஷம் உலக அளவில் சர்ஃபிங்கில் 18வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 17வது இடத்திற்கு முன்னேறி இருக்கு.அடுத்த போட்டி சீனாவில் நடக்கப்போகுது. அதுக்கு சேகர் பச்சை தயாராகிட்டு இருக்கான். இன்னிக்கு நம்ம பள்ளியில் சுமார் 100 பசங்க படிச்சுக்கிட்டு இருக்காங்க. சம்மர் கேம்ப் கூட நடத்துறோம். அதுக்கும் நிறையபேர் வர்றாங்க.