உள்ளூர் செய்திகள்

காகிதப் பயன்பாட்டை குறைக்கும் ரயில்வே

ரயில் புறப்படும் நிலையங்களில் பயணிகளின் முன்பதிவுத் தகவல்களைக் காகிதத்தில் அச்சடித்து ஒவ்வொரு பெட்டியிலும் ஒட்டுவது வழக்கம். 'சார்ட்' எனப்படும் அட்டவணை, நமது இருக்கை எண்ணைச் சரிபார்த்துக்கொள்ள உதவும். ஆனால், இப்போது இணையம் வழியாக முன்பதிவுசெய்து கொள்வோரின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இந்நிலையில், பயணிகளின் இருக்கை எண், பெட்டி எண் போன்ற தகவல்கள் குறுஞ்செய்தியாக, கைபேசிக்கு அனுப்பப்பட்டு விடுகின்றன. எனவே, ரயில் பெட்டிகளில் 'சார்ட்' ஒட்டும் வழக்கத்தைப் படிப்படியாக நிறுத்த ரயில்வே துறை முடிவு செய்தது.முன்னதாக, 2016 நவம்பரில் பெங்களூரு ரயில் நிலையத்தில் இம்முயற்சி பரிசோதனை செய்யப்பட்டபோது, ஆண்டுக்கு 21 லட்சம் ரூபாய் சேமிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மூன்று மாதங்களாக புது டில்லி, மும்பை சென்ட்ரல், சென்னை சென்ட்ரல் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் சோதனை முயற்சியாக 'சார்ட்' ஒட்டுவது நிறுத்தப்பட்டது. இம்முயற்சிகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு ஏ1, ஏ, பி பிரிவு ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் விரைவு ரயில்களில் 'சார்ட்' ஒட்டும் பணி நிறுத்தப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதனால் ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் வரையில் சேமிக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பண ரீதியிலான சேமிப்பு மட்டுமல்லாது, காகிதப் பயன்பாட்டைக் குறைப்பது சூழலியலுக்கும் நன்மை பயக்கும் முடிவாகும். மரங்களை அழித்தே காகிதங்கள் செய்யப்படுகின்றன என்பதால், காகிதத்தைக் குறைவாக உபயோகிக்கும்போது மரம் வெட்டுவதைத் தவிர்க்கிறோம் என்றே பொருள். எனவே, ரயில்வேயின் முயற்சி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.ஆனால், நேரடியாகப் பயணச் சீட்டு எடுத்தவர்களில், ஆர்.ஏ.சி. நிலையில் இருப்பவர்களுக்கு வண்டி கிளம்ப சில மணிநேரம் முன்பாகத்தான் இருக்கை எண் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதால், அதை அறிந்து கொள்வது கடினம். எனவே, இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !