செறிவான எழுத்துநடை
மாணவர்கள் எப்படி எளிமையாக எழுதவேண்டுமோ, அதேபோல் சுருக்கமாகவும் செறிவாகவும் எழுதப் பழகவேண்டும். எழுத்துத் திறமையை மேம்படுத்துவதில் சொற்களின் மீது தனி அக்கறை வேண்டும். ஒரு சொல்லைப் பயன்படுத்தவேண்டுமா? தேவைதானா என்று யோசிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். பேசுவதுபோலவே எழுதவேண்டும் என்று பல ஆசிரியர்கள் சொல்லிக்கொடுப்பார்கள். அது சரியான அணுகுமுறைதான். பேச்சுவழக்கில் ஏராளமான சொற்களைப் பயன்படுத்துவோம். எழுத்துவழக்கில் அத்தனை சொற்கள் தேவையில்லை. பேச்சுவழக்குக்கும் எழுத்து வடிவத்துக்கும் உள்ள வித்தியாசம் இது. எழுதும்போது வந்துவிழும் ஏகப்பட்ட தேவையற்ற சொற்களை நீக்கி, செதுக்குவது எப்படி? முதலில் தேவையற்ற் சொற்கள் என்பதை எப்படி புரிந்துகொள்வது? இணைப்புச் சொற்கள் : ஆனால், அதனால், இந்த நிலையில், எனவே, இதில், அதில் போன்ற சொற்களை, இரண்டு வாக்கியங்களை இணைக்கும் சொற்களாக பயன்படுத்துவோம். பல இடங்களில் இவை இல்லாமலேயே பொருள் தரக்கூடிய வரிகளை எழுத முடியும். அந்த, இந்த, எந்த: இவை அண்மை, சேய்மைச் சுட்டுகள். இன்றைய நவீன தமிழ்மொழி பயன்பாட்டில் இச்சொற்களை மிக அதிகமாக பயன்படுத்துகிறோம். இவற்றை முற்றிலும் நீக்கிவிட்டும் வரிகள் சமைக்க முடியும்.இன்னும் சில சொற்கள்: பொறுத்தவரை, கவனிக்கத்தக்கது, குறிப்பிடத்தக்கது, தான் போன்ற சொற்களும் இன்றைய எழுத்துத் தமிழில் காணக்கிடைக்கின்றன. இவை பேச்சுமொழியில் இருந்து வந்தவை. எழுத்து வடிவத்தில் இதற்கு எந்தப் பொருளும் இல்லை.மொழிவளம்: செறிவுக்கு மேலும் பலம் சேர்ப்பது சொல்வளம். நீங்கள் எழுதும் ஒரு பக்கத்தில் ஒரு வார்த்தை இரண்டு முறைக்கு மேல் இடம்பெறக்கூடாது என்று கறாராக ஒரு விதி போட்டுக்கொண்டு எழுதிப் பாருங்கள். ஒரே சொல் மீண்டும் வருமானால், அதற்கு முற்றிலும் வெறொரு வார்த்தையைத் தேடிக் கண்டுபிடிப்பீர்கள். புதிய புதிய சொற்கள் உங்கள் வார்த்தைக் குவியலை அதிகரிக்கும். மொழி செம்மைப்படும்.இதனை எப்படிச் செய்வது?வெகு எளிது. பயிற்சி செய்யும்போது, பொருத்தமான வார்த்தைகளில் முதலில் உங்கள் சிந்தனையைப் பதிவுசெய்யுங்கள். பின்னர், மீண்டும் வாசித்துப் பாருங்கள். மேலே குறிப்பிட்டுள்ள அம்சங்களை மனத்தில் கொண்டு, திருத்தங்கள் மேற்கொள்ளுங்கள். படிப்படியாக உங்கள் எழுத்துநடை செறிவடையும், வளம் பெறும்.-துளசி