வேராய் அமையும் சொற்கள்
ஒரு வினைச்சொல்லானது, பல்வேறு வகையில் வெவ்வேறு சொல்லாக மாறிக்கொண்டே இருக்கும். கட்டளைப் பொருள் தரும் எல்லாச் சொற்களும் வினைவேர் என்று அழைக்கப்படும். நில், செல், கொடு, குடி, படி, சுற்று, செய் என்று வருகின்ற இச்சொற்களைக் கவனியுங்கள். இவை என்ன பொருளை உணர்த்துகின்றன? கட்டளையிடுகின்றன. ஏவுகின்றன. ஒரு வினையைச் செய்யும்படி உத்தரவிடுகின்றன. இவ்வாறு கட்டளைப்பொருள் தரும் வினைச்சொற்களை, வினைவேர் என்று சொல்கிறோம். இச்சொற்கள்தாம் எல்லாவகையான வினைச்சொற்களுக்கும் வேராய் அமைகின்றன. இந்தச் சொற்களைப் பகுக்க முடியாது. இவையே எல்லாச் சொற்களுக்கும் அடிப்படையாய் இருக்கின்றன. இதிலிருந்தே, வினைச்சொற்களின் பல்வேறு வகைகளும் தோன்றுகின்றன. ஒரு கட்டளைப் பொருள் தரும் வினைவேர்ச் சொல் வெறுமனே உத்தரவு போடும்; கட்டளையிடும். அதற்கு திணை, பால், எண், இடம், காலம் ஆகிய எந்தத் தன்மையையும் உணர்த்தும் ஆற்றல் இல்லை. 'வா', 'போ' என்றால், வெறுமனே அது கட்டளைதான். ஆனால், 'போகிறான்' என்று வரும்போது, அங்கே போவதாகிய வினை முழுமையாய் முற்றி, வினைமுற்றாகி விடுகிறது. 'போ' என்பது வெறும் கட்டளைப்பொருள். 'போகிறான்' என்பதில், அச்சொல் உயர்திணை (திணை), ஆண்பால் (பால்), ஒருமை (எண்), படர்க்கை (இடம்), நிகழ்காலம் (காலம்) என, அனைத்தும் உணர்த்தப்பட்டு விடுகின்றன.ஒரு முற்றிய வினையைச் சொல்வது வினைமுற்று. போகிறான், வருகிறான், நின்றான், சென்றன, கொடுப்பவை, குடிப்பாள், சுற்றியது, செய்யும் என்று அமைவன அனைத்தும் வினைமுற்றுகள். எச்சவினை என்று ஒன்று இருக்கிறது. வினைமுற்றில் உள்ள ஈற்று விகுதி மட்டும் அச்சொல்லில் அமையாது, எச்சமாய்த் தொக்கி நின்றால் அது எச்சவினை. 'போன, வந்த, நிற்கின்ற, செல்ல, கொடுத்த, குடித்த, சுற்றிய, செய்ய' என்று அவை அமையும். வினையெச்சச் சொற்களால், காலம் காட்டுவது மட்டும்தான் இயலும். 'நிற்கின்ற' என்றால் நிகழ்காலம். 'கொடுத்த' என்றால் இறந்த காலம். 'வர' என்றால் எதிர்காலம். 'வந்த' என்றால் இறந்தகாலம். வருகின்ற என்றால் நிகழ்காலம்.எச்சவினையை அடுத்து வரும் சொல் பெயர்ச்சொல் என்றால், அது பெயரெச்ச வினை. சுருக்கமாகப் பெயரெச்சம். எச்சவினையை அடுத்து வரும் சொல், வினைச்சொல்லாக இருந்தால் அது வினையெச்ச வினை. சுருக்கமாக வினையெச்சம். கொடுத்த பணம்: இங்கே கொடுத்த என்பதை அடுத்து பணம் என்ற பெயர்ச்சொல் வருவதால், இது பெயரெச்சம். கொடுத்துச் சென்றான்: இங்கே கொடுத்து என்பதை அடுத்துச் சென்றான் என்ற வினைச்சொல் வருவதால், இது வினையெச்சம். ஆக, ஒரு வினைவேரிலிருந்து வினைமுற்றுகள் தோன்றுகின்றன. எச்சவினைகளும் தோன்றுகின்றன. எச்சவினை பெயரெச்சம், வினையெச்சம் என்று இருவகையாய்ப் பிரிகிறது. ஒரு வினைமுற்று, பால் விகுதி பெற்று முடியும் எனில், அங்கே வினையாலணையும் பெயர் தோன்றும். 'கொடு' என்பது வினைவேர். 'கொடுத்தான்' என்பது வினைமுற்று. 'கொடுத்த' என்பது எச்சவினையில் பெயரெச்சம். 'கொடுத்தவர்' என்பது, வினையாலணையும் பெயர். வினைச்சொற்களில் வினையாலணையும் பெயர் தோன்றும். பெயர்ச்சொற்களாய்த் தோன்றுபவை, காலம் காட்ட மாட்டாதவை. ஆனால், வினையாலணையும் பெயரில் அமையும் பெயர்ச்சொற்கள், காலம் காட்டுகின்றன. 'கொடுத்தவர்' என்பதில், இறந்தகாலம் காட்டப்படுகிறது. 'வருபவர்' என்பதில், எதிர்காலம் தெரிகிறது.- மகுடேசுவரன்