உள்ளூர் செய்திகள்

ஆட்சி பணியில் முதல் பெண்

சி.பி.முத்தம்மாகாலம் : 24.1.1924 - 14.10.2009பிறந்த ஊர் : விராஜ்பேட்டை, கர்நாடகம்சாதனை : இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண், முதல் பெண் வெளியுறவு அதிகாரி.இவர் பதவிக்கு வருவதற்கு முன்புவரை ஆண்கள் மட்டுமே ஆட்சிப் பணிகளில் ஆட்சி செய்துகொண்டிருந்தனர். 'ஆணுக்குச் சரிநிகர் பெண்' என்பதை நிரூபிக்கும் விதமாக, அரசுப்பணி தேர்வாணையம் நடத்திய தேர்வில் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று இந்திய வெளியுறவுத் துறையில் சேர்ந்தார் முத்தம்மா. ஒன்பது வயது சிறுமியாக இருந்தபோது, வனத்துறை அதிகாரியாக இருந்த இவரது தந்தை இறந்தார். அந்தக் கஷ்டமான சூழலிலும் படிப்பதற்கு அவரது அம்மா உதவினார். பள்ளிப் படிப்பு முடித்து சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பும், பிரசிடென்சி கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியமும் படித்தார். வெளியுறவுத் துறையில் பணியாற்ற வேண்டும் என்பது இவரது விருப்பம். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். அதில் வெற்றி பெற்ற நாட்டின் முதல் பெண் என்ற பெருமையுடன் 1949ல் பணியில் சேர்ந்தார். அங்கே, ஆண், பெண் அதிகாரிகள் இடையே பாகுபாடுகள் பல இருந்தன. திருமணம் செய்துகொள்ள அரசிடம் முன்அனுமதி பெறுதல்; குடும்பப் பொறுப்பால் பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டால் பணியில் இருந்து விலக்கப்படுதல்; பணி முதிர்வு, பதவி உயர்வு போன்றவற்றில் பெண்கள் உரிமை கோர முடியாதது போன்ற தனித்தனி விதிமுறைகள் இருந்தன.இந்தப் பாலின பாகுபாடுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் முத்தம்மா. அந்த வழக்கின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகவும் சமத்துவத்திற்கு ஆதரவாக சட்டத்தைத் திருத்தி எழுத ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது. பின்னர் பல பதவி உயர்வுகளைப் பெற்று, வெளிநாட்டு தூதர், உயர் ஆணையாளர் போன்ற பதவிகளில் முதல் இந்தியப் பெண்ணாக அமர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !