சனிக் கிரகத்தில் உப்புநீர்!
பூமிக்கு ஒரு நிலா இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். சனிக் கிரகத்தில் 19 நிலாக்கள் உள்ளன. (இன்னும்கூட இருக்கலாம்!) அதில் ஒன்று 'என்கிளேடஸ்' (Enceladus). இந்த நிலவிலிருந்து வெளியேறும் துகள்களில் உப்பு நீர் இருக்கிறது. இந்த நீர்த்துகள்களால் சனிக் கிரகத்தைச் சுற்றி வளையம் உருவாகியுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான 'நாசா' (NASA), 'என்கிளேடஸ்' நிலவுக்கு அனுப்பிய 'காசினி' (Cassini) என்ற விண்கலம் 'அண்டத்தூசி ஆய்வுக்கருவி'யைப் (Cosmic Dust Analyzer) பயன்படுத்தி 2005ஆம் ஆண்டில் இதைக் கண்டுபிடித்தது. இந்த நீர்த்துகள்கள் பனிக்கட்டிகளாக மாறி, சனிக்கிரகத்தைச் சுற்றிவரும் துகள்களுடன் இணைந்து வளையமாக மாறித் தோற்றமளிக்கிறது. 'என்கிளேடஸ்' நிலவில் நீர்த்துளிகள் காணப்படுவதால் சனிக்கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எதிர்காலத்தில். 'எந்த ஊரில் வசிக்கிறீர்கள்' என்று கேட்பது போய் 'எந்தக் கிரகத்தில் வாழ்கிறீர்கள்' என்று கேட்கிற காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!