கிளிகளின் சரணாலயம்
குஜராத் மாநிலம், ஜுனாகட் மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்ஷுக் என்பவர் 2000ம் ஆண்டு அடிபட்டு, கட்டாய ஓய்வில் இருந்தார். அப்போது, அவரைக் காண வந்த நண்பர் ஒருவர், கொஞ்சம் சோளக்கதிர்களைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவற்றில் ஒன்றைத் தன் வீட்டு பால்கனியில் கட்டித் தொங்கவிட்டார் ஹர்ஷுக். அதைச் சில கிளிகள் வந்து கொத்தித் தின்றதைப் பார்த்ததும் மகிழ்ந்து போனவர், மேலும் சில சோளக்கதிர்களை பால்கனியில் வைக்க, வரும் கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.கடந்த 17 ஆண்டுகளாகத் தேடிவரும் கிளிக்கூட்டத்திற்கு உணவளிப்பதையே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹர்ஷுக், ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை இதற்காக செலவிடுகிறார். இவரின் இச்செயலைப் பாராட்டி, மத்திய அரசின் சிருஷ்டி சம்மான் விருதை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றிருக்கிறார். கிட்டத்தட்ட 3,000 கிளிகளுக்கு உணவளித்துப் பாதுகாத்து வரும் இவர், தனது பேரக் குழந்தைகளும் இச்செயலை மிகவும் ரசிப்பதாக மனநிறைவுடன் கூறுகிறார்.