உள்ளூர் செய்திகள்

மணல் பரப்பிய முற்றம்

மணல், கட்டடங்கள் கட்டுவதற்கு பெரிதும் பயன்படுகிறது. ஆனால், நம் முன்னோர் விழாக்களுக்கும் மணலை பயன்படுத்தி இருக்கிறார்கள்.திருமணம் போன்ற மகிழ்ச்சியான தருணங்களின் போது, தரையில் மணல் பரப்பி விழா தொடங்குவதை வழக்கமாக பின்பற்றி இருக்கிறார்கள். 'தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்' (197) என்பது அகநானூற்று பாடல் வரி. வீட்டின் முற்றத்தில் புதுமணல் பரப்பும் பழக்கம், முந்தைய தமிழ் சமூகத்தில் இருந்திருக்கிறது என்பதை இந்த வரிகள் தெரிவிக்கின்றன. இந்திர விழாவின்போது, அரங்கத்தில் உள்ள பழைய மணலை எடுத்து விட்டு, புது மணல் பரப்பியதாக மணிமேகலை காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. மணலை இப்போதும்கூட, முளைப்பாரி கட்டுவதற்கு பயன்படுத்துகிறார்கள்.பழங்காலத்தில், கடற்கரையில் மணல் அரிப்பு ஏற்படாமல் இருக்க, மரங்கள் வளர்க்கப்பட்டன. சோலைகளை ஏற்படுத்தி, கரையோர குடியிருப்புகள் பாதுகாக்கப்பட்டன. கடற்கரையில் புன்னை, ஞாழல், தாழை, நாவல் போன்ற மரங்கள் வளர்க்கப்பட்டன. இந்த மரங்கள், மணல் அரிப்பை தடுத்து ஊரைக் காத்ததோடு, கடற்கரைக்கு நறுமணம் கமழும் பூக்களையும் கொடுத்தன. குறிப்பாக, மணலும் மணல் சார்ந்த பகுதியுமான நெய்தல் நிலத்தில், மீன் இறைச்சி அதிகமாக பயன்படுத்தப்படும். அந்த இறைச்சி வாடையை போக்குவதற்காக, பூக்கள் நிறைந்த சோலைகள் ஏற்படுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !