உள்ளூர் செய்திகள்

மக்களுக்கான அறிவியல்!

2019இல் சமூக மாற்றத்தின் முக்கிய கூறுகளை உள்ளடக்கியிருக்கும் இரண்டு முக்கியமான விஷயங்கள் என்னைக் கவர்ந்தன.* அறிவியல் பரப்பாளர் பில் நை (Bill Nye) என்பவரால் நடத்தப்படும் நிறுவனம் பிளானட்டரி சொசைட்டி (Planetary Society). இது கார்ல் சாகன் (Carl Sagan) என்பவரால் 1980களில் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் ஒரு செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால், இதற்கான எரிசக்தியை இது சூரியமின்கலத்தைப் பயன்படுத்தி உருவாக்கிக்கொள்ளும். விண்கலங்கள் ஏவும் செயற்பாட்டில் இது ஒரு புதுவகையான தொழில்நுட்பம். இதனைக்கொண்டு எதிர்காலத்தில் எவ்வளவு தூரத்திற்கு வேண்டுமானாலும் விண்கலங்களை ஏவி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம். விண்வெளியில் தொலைதூரப் பயணங்களை இது சாத்தியப்படுத்தும். மாற்று எரிபொருள் தேடி அலையும் இந்த நேரத்தில் விண்ணுக்காக செலவழிக் கப்படும் எரிசக்தியை குறைக்க உதவும் இம்முயற்சி பாராட்டத் தக்கது!.* டிசம்பர் 26 அன்று நடந்த கங்கண சூரிய கிரகணம் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது. இதைக் காண ஊடகங்கள், மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் நிறுவனம், தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசின் அறிவியல் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு அறிவியல் இயக்கங்கள் உள்ளிட்ட அறிவியல் அமைப்புகள் பெருமளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தின. இதன் பயனாக பொதுமக்களும் மாணவர்களும் சூரிய வடிகட்டிக் கண்ணாடிகளைக் கொண்டு சூரிய கிரகணத்தை ஆர்வத்துடன் கண்டு களித்தனர். அவர்கள் தங்களது அனுபவங்களை விளக்கியபோது எதிர்கால அறிவியல் இன்னும் உச்சத்தை எட்டும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆங்காங்கே மக்கள் பழைய நம்பிக்கைகளை ஒதுக்கி சாப்பிட்டுக்கொண்டே கிரகணத்தை ரசித்தது அறிவியலின் சக்தியை உணர்த்தியது. - என்.மாதவன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !