கண்ணெதிரே விரிந்த அறிவியல்!
பிரேமானந்த் சேதுராஜன் முதலில் இளஞ்சிவப்பு நிற ராக்கெட்டைத் தன்மீது குறி பார்த்து வீசச் சொன்னார். அரங்கில் குழுமியிருந்த 1,500 மாணவர்களும் சர் சர் என, அவர் மீது இளஞ்சிவப்பு ராக்கெட்டுகளை வீசினர். ஆனால், அவை கொஞ்ச தூரம்தான் பறந்தன; பாதியிலேயே கீழே விழுந்துவிட்டன. மாணவர்கள் மீண்டும் முயற்சி செய்தார்கள். அவர்களுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி அவர் மீது வீசினார்கள். இந்த முறையும் ராக்கெட்டுகள் அவரை எட்டவில்லை. “எல்லோரும் பச்சை நிற ராக்கெட்டை என் மீது வீசுங்கள்” என்றார் பிரேம். இந்த முறை எப்படியாவது போட வேண்டும் என்று சில மாணவர்களும், எங்கே போகப்போகிறது என்று சில மாணவர்களும் தயக்கத்துடனேயே முயற்சி செய்தார்கள். ஒன், டூ, த்ரீ என்ற கவுன்ட் டவுன் முடிந்ததும், அரங்கமே ஆச்சரியத்தில் திளைத்தது. பச்சை நிற ராக்கெட் அம்பு மழை போல் பிரேம் மீது விழுந்தன. அட, இது எப்படி விழுந்தது என மாணவர்களுக்கு ஆச்சரியம். இதற்குப் பின்னால் இருக்கும் இயற்பியலை எளிய மொழியில் விளக்கினார் பிரேமானந்த் சேதுராஜன். அதாவது, இளஞ்சிவப்பு ராக்கெட்டின் மேல், இரண்டு க்ளிப்கள் பொருத்தப்பட்டிருந்தன. பச்சை நிற ராக்கெட்டில் இரண்டு க்ளிப்களும் நடுவில் குத்தப்பட்டன. ராக்கெட்டின் மேலே பொருத்தப்பட்டதால், அதனால் ரொம்ப தூரம் செல்ல முடியவில்லை. பாதியிலேயே கீழே விழுந்துவிட்டன. பச்சை நிற ராக்கெட்டில் நடுவில் குத்தப்பட்டிருந்ததால், நிலையாகப் பறந்து இலக்கை அடைய முடிந்தது. விண்ணில் அனுப்பப்படும் ராக்கெட்டிற்கும் இதே கோட்பாடுகள்தான். இப்படி பல ஆச்சரியமூட்டும் அறிவியல் விளக்கங்கள் நேரடிப் பரிசோதனைகள் மூலம் சொல்லிக்கொடுக்கப்பட்ட இடம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி. பிக் பாங் என்ற மிகப்பெரும் அறிவியல் திருவிழாவை நடத்தி, அறிவுக்கண்களைத் திறந்தவர்கள் லெட்ஸ் மேக் இன்ஜினியரிங் சிம்பிள் என்ற எல்.எம்.இ.எஸ். நிறுவனத்தைச் சேர்ந்த பிரேமானந்த் சேதுராஜன் குழுவினர். மாணவர்கள் தயங்காமல் போட்டி போட்டுக்கொண்டு எல்லா பரிசோதனைகளிலும் கலந்துகொண்டார்கள். “இன்னும் நிறைய நேரம் இருக்கணும், நிறைய சொல்லிக் கொடுங்க” என்று பிரேமானந்த் குழுவை விடாமல் மொய்த்துக் கொண்டார்கள். பாடத்திட்டத்தில் இருக்கும் பல கோட்பாடுகள் எளிய முறையில், ஆச்சரியமூட்டும் வகையில் செய்துகாட்டப்பட்டன. அவை, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புரியும்படி இருந்தன. கண் முன்னால் ஹைட்ரஜன், ஆக்சிஜன் எப்படி இருக்கும், அவற்றுக்குள் நடக்கும் தள்ளுமுள்ளு மோதல்களால் நடக்கும் வினைகள் என்ன என்பதை மேஜிக் மாதிரி கண்டு ரசித்தார்கள்.இந்த ஒரு நாள் நிகழ்ச்சியில் அழுத்தம் (பிரஷர்) தொடர்பான பரிசோதனைகள் செய்துகாட்டப்பட்டன. பெர்னோலிஸ் கோட்பாடு, ஹைட்ரஜன் வாயு வெடிப்பு, பவர்ஃபுல் பிரஷர், புகையை உருவாக்குவது எப்படி, இருக்கையில் அமர்ந்தபடி மிதப்பது எப்படி, டிரை ஐஸ் சோதனை போன்றவை அவற்றில் சில.இதோடு முடிந்துவிடவில்லை. இங்கு மாணவர்களுக்குக் கிடைத்த ஆச்சரியங்களை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்பதற்காக பரிசோதனை கிட்களும் வழங்கப்பட்டன. அதில் எளிதில் புரியும்படி, எப்படிச் செய்ய வேண்டும் என்ற செயல்முறை விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சி அவர்களை நிச்சயம் நாளை ஏதாவது ஒரு துறையில் ஆராய்ச்சியாளராக மாற்ற உதவும் என்பது நிச்சயம்.