முறத்தில் தூற்றப்பட்ட பதர்கள்
மூங்கிலை நீளவாக்கில் மெல்லியதாக சீவி, அதிலிருந்து பின்னப்படும் பொருள்களில் ஒன்று முறம். பழந்தமிழகத்தில் அனைவர் வீட்டுக்குள்ளும் இருந்த அத்தியாவசியமான் பொருள் இருந்தது. இன்றும் கிராமத்தில் முறம் இருந்தாலும், அவற்றின் பயன்பாடு குறைந்துவிட்டது. நகரங்களில் மூங்கில் முறம் இல்லாமலே போய்விட்டது.அரிசி புடைக்கவும், கல் நீக்கவும், நொய் பிரிக்கவும், கீரை ஆய்வதற்கும் பயன்பட்டது முறம். விவசாய வீடுகளில், தானியங்களைத் தூற்ற, புடைக்க, கோணிப்பையில் வாரி திணிக்க, முறம் பயன்பட்டது. இப்போது, தானியங்களில் கல், குறுநொய் நீக்குவதை இயந்திரங்களே செய்துவிடுவதால், முறத்தின் பயன்பாடு குறைந்து விட்டது.மூங்கில் கொண்டு பின்னப்பட்ட முறத்தில், சிறுசிறு இடைவெளி இருக்கும். இந்த இடைவெளியில் தானியங்கள் சிந்தி விடாமல் இருக்க, சாணத்தை கெட்டியாகக் கரைத்துப் பூசி, காயவைப்பார்கள்.பொங்கல் பண்டிகையின்போது, முறத்தில் பூசணி இலையில் சூரியனுக்கு சோறு படைக்கும் பழக்கம் கிராமங்களில் உண்டு. ஆடி பதினெட்டு விழாவின் போதும், முறத்தில் பூ, பழம் வைத்து ஆற்றில் விடும் பழக்கம் இருந்திருக்கிறது.சில ஊர்களில், இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் போதும், ஒற்றை முறத்தில் பொருட்களை வைத்துப் படைப்பார்கள்.நெற்களத்தில், பதரும் தூசுமாக இருக்கும் நெல்லை, முறத்தில் அள்ளி, தலைக்கு மேலே தூக்கிப் பிடித்து தூற்றுவார்கள். தூற்றும்போது காற்று வீசினால், நெல் தனியாகவும், தூசு, பதரு தனியாகவும் பிரியும்.காற்று வீசவில்லை எனில், முறத்தின் அடிபாகத்தைப் பிடித்துக் கொண்டு விசிறுவார்கள். அப்படி காற்றை விசிறும்போது, பதரும் (முற்றாத நெல்) நெல்மணிகளும் தனியாகப் பிரியும்.'முறம் செவி மறைப்பாய்பு முரண் செய்த புலி செத்து' என்ற கலித்தொகைப் பாடலில், பெண் ஒருத்தி முறத்தைக் கொண்டு, புலியை விரட்டிய தகவல் கூறப்பட்டுள்ளது. 'முறம் செவி யானை வேந்தர்' என்ற புறநானூற்றுப் பாடலில், யானையின் காது முறம் போல் இருந்ததாக உவமை கூறப்பட்டுள்ளது.பழைய முறத்துக்கு சாணி என்பது ஒரு பழமொழி.'பல்லரிசியாவும் மிகப் பழவரிசி தாமாகச்சல்லவட்ட மெனுஞ்சுளகால் தவிடுபடப் படையீரே'என்ற கலிங்கத்துப் பரணி பாடலில், எதிரி வீரர்கள், முறத்தில் புடைக்கப்பட்ட பதர்களைப் போல சிதறினார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இப்பாடலில், முறம், சுளகு என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளது.முறம், அகன்ற வாய் கொண்டதாக இருக்கும். சுளகு, குறுகிய வாய் கொண்டதாக இருக்கும்.