உள்ளூர் செய்திகள்

ஒரு புலவர் ஏழு பெயர்கள்

பெரும்பாலானோருக்கு ஒரே ஒரு பெயர்தான். சிலருக்கு மட்டும் பள்ளியில் ஒரு பெயர், வீட்டில் ஒரு (செல்லப்) பெயர் இருக்கும்.ஆனால், அந்தக்காலத்தில், நிலைமையே வேறு. ஒருவருடைய செயற்பாடுகள், சிறப்புகளைப் பொறுத்து, அவர்களுக்குப் பல பெயர்கள் சூட்டப்படும்.எடுத்துக்காட்டாக, தமிழ் பக்தி இலக்கியத்திற்குப் பல இணையற்ற பாடல்களை வழங்கிய திருநாவுக்கரசருக்கு எத்தனை பெயர்கள் தெரியுமா?மருணீக்கியார்: அவருடைய இயற்பெயர், அதாவது, இயல் + பெயர் => இயல்பாக அவருடைய தந்தை, தாய் அவருக்குச் சூட்டிய பெயர் இது.மருள் + நீக்கியார் என்பதுதான் மருணீக்கியார் என்று மாறியுள்ளது. மருள் என்றால் மயக்கம், மருள் நீக்கியார் என்றால், மயக்கத்தை நீக்கித் தெளிவைத் தருபவர் என்று பொருள்.தருமசேனர்: சைவ சமயத்திலிருந்து மருணீக்கியார் சமண சமயத்துக்கு மாறியபோது, அவர் இந்தப் பெயரை ஏற்றுக்கொண்டார்.நாவுக்கரசர்: மீண்டும் சைவ சமயத்துக்குத் திரும்பிய அவர், இறைவனைப் போற்றிப் பல திருப்பாடல்களைப் பாடினார். அவரது பாடல்களின் சிறப்பைச் சுட்டிக்காட்டும் வகையில், அவருக்கு இறைவனே இந்தப் பெயரைச் சூட்டியதாக நம்பப்படுகிறது.நாவுக்கு அரசர் => நாவுக்கரசர். அத்துடன் 'திரு' என்ற பெருமைக்குரிய சொல்லைச் சேர்த்து, திருநாவுக்கரசர் என்பார்கள். நாவால் சிறந்த பாடல்களைத் தரும் கவியரசர் என்று பொருள்.அப்பர்: சைவத் திருப்பாடல்களை வழங்கிய நான்கு பெரும்புலவர்களை, 'நால்வர்' என்று அழைப்பார்கள். அவர்களில் இளையவரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரைச் சந்தித்தபோது, அவருடைய வயதைக் கருதி 'அப்பரே' (தந்தையே) என்று அழைத்தாராம். ஆகவே, அதுவும் அவருடைய சிறப்புப்பெயர்களில் ஒன்றாகிவிட்டது.உழவாரத்தொண்டர்: சிவாலயங்களைத் தூய்மைப்படுத்துவதற்காக, 'உழவாரம்' என்கிற சிறு கருவியைத் திருநாவுக்கரசர் எப்போதும் தன் கையில் வைத்திருந்தார். அவருடைய இந்தத் தொண்டைப் போற்றும் வகையில், அவருக்கு இந்தப் பெயர் அமைந்தது.தாண்டகவேந்தர்: தாண்டகம் என்கிற கவிதை வடிவத்தில் சிறந்து விளங்கியவர் திருநாவுக்கரசர். அதைச் சுட்டிக்காட்டும் வகையில் இந்தப் பெயர் அமைந்தது.வாகீசர்: இதுவும் நாவுக்கரசரின் மொழிச்சிறப்பைப் போற்றும் பெயர்தான். 'வாக்கு' என்றால் சொல். 'ஈசர்' என்றால் தலைவர். சொல்லுக்குத் தலைவர் என்ற பொருளில் அவரை, 'வாகீசர்' என்றழைத்தார்கள்.எத்தனை அழகழகான பெயர்கள், அழகழகான விளக்கங்கள். சும்மா 'பேருக்கு' ஏதோ ஒரு பெயரை வைக்காமல், எப்படிச் சிந்தித்துப் பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள் அன்றைய தமிழர்கள்!- என். சொக்கன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !