சுருங்கி விரியும் தண்டவாளங்கள்
'தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரயில்கள் தாமதம்' என்ற செய்தியை அடிக்கடி படிக்கிறோம். இது எப்படி நிகழ்கிறது? தண்டவாளங்களை அமைக்கும்போது, ஒரு தண்டவாளத்துடன் மற்றொரு தண்டவாளத்தை மிகச் சிறிய இடைவெளி விட்டு இணைக்கிறார்கள். தண்டவாளங்கள் கோடைக்காலங்களில் அதிக வெப்பத்தால் விரிவடைகின்றன. இப்படி விரிவடையும்போது இணைக்கப்பட்ட தண்டவாளங்கள் ஒன்றோடு ஒன்று அழுத்தப்பட்டு வளைந்து ரயில் கவிழ நேரிடும். இதைத் தவிர்க்கவே தண்டவாளங்களை இணைக்கும்போது இடைவெளி விடப்படுகிறது. இந்த இடைவெளி குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏற்படுவதையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்கிறோம். ஒரு பொருளின் வெப்பநிலை உயரும்போது அதில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் அதிக வேகத்துடன் இயங்கி ஒன்றையொன்று விலகி விரிவடைகின்றன. ஒரே அளவு வெப்பம் கொடுக்கப்படும்போது திடப்பொருள்கள் மிகக் குறைவாகவும், வாயுக்கள் மிக அதிகமாகவும் விரிவடைகின்றன. வெப்பப்படுத்தும்போது பொருட்கள் விரிவடைகின்றன. குளிர்விக்கப்படும்போது சுருங்குகின்றன. ஒரு சில பொருள்களைத் தவிர, அனைத்து திடப் பொருள்களும், திரவ, வாயுப் பொருள்களும் வெப்பத்தால் விரிவடைகின்றன. தண்டவாளங்கள் மட்டுமின்றி, தொலைபேசிக் கம்பிகள் கம்பங்களின் மூலம் இணைக்கப்படும்போது, வெயில் காலத்தில் விரிவடைந்தும், குளிர் காலத்தில் இறுகியும் இருப்பதற்கு ஏற்ப அவை அமைக்கப்படுகின்றன.