அமைதி நேரம்
ஆட்டிசம் எனும் வளர்ச்சிக் குறைபாடு தற்போது குழந்தைகளைப் பரவலாகப் பாதித்து வருகிறது. இக்குழந்தைகளை ஒதுக்கவோ, புறந்தள்ளவோ கூடாது என்பதை வலியுறுத்தி, உலகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விழிப்புணர்வின் ஒரு நிகழ்வாக இங்கிலாந்தில், பெரிய வணிக நிறுவனங்கள் அக்டோபர் 2ம் தேதி அன்று ஒரு மணி நேரத்தை அமைதி நேரமாக (Quiet Hour) அறிவித்துள்ளன.இங்கிலாந்தின் தேசிய ஆட்டிச சங்கத்தின் முயற்சியால், அன்று ஆட்டிச விழிப்புணர்வு நிகழ்வுகள் நாடெங்கும் நடைபெற உள்ளன. அதன் ஒரு பகுதியாக, ஆட்டிசக் குழந்தைகளைப் பாதிக்கும், கண்கள் கூசும் விளக்கொளி, சத்தமான சங்கீதம் போன்றவற்றை ஒரு மணி நேரத்திற்குக் கடைகளில் தவிர்க்க முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் சென்சரி பிரச்னைகளால் அவதிப்படும் ஆட்டிசக் குழந்தைகளுக்கு இனிய ஷாப்பிங் அனுபவத்தை வழங்கவும், மற்ற வாடிக்கையாளர்களுக்கு ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிவெடுத்துள்ளனர்.இண்டூ சென்டர் (Intu centre) என்றழைக்கப்படும் சங்கிலித் தொடர் வணிக வளாகங்கள் இங்கிலாந்து முழுவதும் கிளைபரப்பி உள்ளன. இந்நிறுவனத்தோடு இன்னும் பல்வேறு கடைகளும், உணவகங்களும் இந்த முயற்சியில் பங்கேற்க உள்ளன. இதற்குச் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் நன்றியையும் பாராட்டுகளையும் இப்போதிருந்தே தெரிவித்தவண்ணமுள்ளனர்.