விண்வெளியே என் வீடு!
சுனிதா வில்லியம்ஸ் பிறந்த தினம் செப்டம்பர் 19விண்வெளியில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு பூமிக்கு வருகிறது. அந்த அழைப்பில், விண்வெளியில் இருந்து தான் காணும் காட்சிகளை பெற்றோருடன் மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொள்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!அன்று, டிசம்பர் 9, 2006ஆம் ஆண்டு இரவு 8.47 மணிக்கு அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து கம்பீரமாகச் சீறிப்பாய்ந்தது டிஸ்கவரி விண்கலம். இரண்டு நாள் பயணத்திற்குப் பின், சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து, விண்ணில் மிதந்தபடி நம் பூமியைப் பார்த்து ரசித்தார்கள் அந்த எட்டு அதிர்ஷடசாலிகள். அதில் ஒருவர்தான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ்.அப்பா தீபக் பாண்ட்யா நரம்பியல் வல்லுநர். அம்மா போன்னி பாண்ட்யா, ஸ்லோவேனிய அமெரிக்கர். இவர்களுக்கு மகளாக அமெரிக்காவின் ஓஹாயோ மாநிலத்தில் யூக்ளிட் என்ற இடத்தில் பிறந்தார் சுனிதா.அமெரிக்கக் கடற்படை அகாடமியில் இளங்கலை பட்டமும் ஃபுளோரிடாவில் பொறியியல் முதுகலைப் பட்டமும் பெற்றார். அமெரிக்க கடற்படையில் இளநிலை அதிகாரியாக 1987ல் சேர்ந்தார். 2 ஆண்டுகளில் கடற்படை விமானியானார். இறக்கை முளைத்ததுபோல வானில் பறந்துகொண்டே இருந்தார். 8 ஆண்டுகளில் 30 வகை விமானங்களை ஓட்டி, 2770 மணி நேரங்கள் வானில் பறந்து சாதனை படைத்தார்.அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பயிற்சி விண்வெளி வீரராக 1998ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு, கடுமையான பயிற்சிகளுக்குப் பிறகு விண்வெளி வீரர் ஆனார். இதனால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று பணியாற்றும் வாய்ப்பை நாசாவிடம் இருந்து சுனிதா பெற்றார். விண்வெளி நிலைய கட்டுமானப் பணிகளிலும் சிறப்பாகப் பணியாற்றிய சுனிதா, 4 முறை விண்வெளியில் நடந்து புதிய சாதனை படைத்தார். மொத்தம் 12 மணி நேரம் 55 நிமிடங்கள் விண்வெளியில் நடந்தார். இதுவரை யாரும் செய்திடாத அரிய சாதனை!“விண்வெளி மிகவும் ஆச்சரியமான இடம். அங்கு இருப்பதை என் வீட்டில் இருப்பதைப்போல் உணர்கிறேன். நான் ஒரு விண்வெளி வீராங்கனையாக வருவேன் என்று கற்பனைகூட செய்யவில்லை. பலமுறை தோல்விகளைச் சந்தித்த பிறகே, இந்த இலக்கை அடைந்திருக்கிறேன்” என்று டில்லி தேசிய அறிவியல் மைய மாணவர்களுடன் பேசியபோது சொன்னார். * சர்வதேச விண்வெளி நிலையத்தின் கட்டுமானப் பணிகளுக்காக சுனிதாவுக்கு முன்பே பயணித்தவர் கல்பனா சாவ்லா.* 2012ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு விண்வெளியில் இருந்தபடியே சுனிதா வில்லியம்ஸ் ஓட்டு போட்டார்.* மொத்தம் 322 நாட்கள் விண்வெளியில் தங்கி சாதனை படைத்து இருக்கிறார். * விண்வெளியில் மாரத்தான் ஓடிய முதல் நபர் சுனிதா. அங்கு இருந்தபடியே வானொலியில் பேசினார்.