கடல் எண்ணெய் அகற்றும் பணியில் மாணவர்கள்
சென்னை எண்ணூர் கடல் பகுதியில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றும் பணியில், நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே, கடந்த ஜனவரி 28ல் நடந்த கப்பல் விபத்தில், பெருமளவிலான கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. எண்ணூர் துறைமுகத்திலிருந்து திருவான்மியூர் வரை பரவிய எண்ணெய் படலத்தால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் படலத்தை அகற்ற தன்னார்வலர்கள் தேவை என்று அரசு தெரிவித்தது. இதையடுத்து, நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், எண்ணூர் கடற்கரைக்கு வந்து எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்களும் கடலைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.