உள்ளூர் செய்திகள்

சூப்பரோ சூப்பர் 30

ஐ.ஐ.டி.யில் சேருவது என்பது இந்திய மாணவர்களின் பெருங்கனவு. நகரத்தில் பயின்றுவரும் மாணவர்களே இதற்கான தயாரிப்பில் அதிகமாக ஈடுபடுவார்கள். அப்படியும் பலரால் தேர்வுபெற முடியாது. நகரத்திலேயே இப்படி என்றால், சிறுநகர, கிராமப் பகுதி மாணவர்களை நினைத்துப் பாருங்கள். எவ்வளவு கடினம்?ஆனால், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் 396 பேரை, கடந்த 15 ஆண்டுகளில், ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றிபெற வைத்திருக்கிறார் ஒரு கணித வல்லுனர். அந்தச் சாதனையாளர் பெயர் ஆனந்த்குமார். அவருடைய முயற்சியின் பெயரே 'சூப்பர் 30.'யார் இந்த ஆனந்த்குமார்?பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த்குமாருக்கு இப்போது 45 வயது. 29 வயது இளைஞராக 'சூப்பர் 30' என்ற பயிற்சிப் பட்டறையைத் தொடங்கினார். இதற்கு அவரது சொந்த வாழ்க்கையும் ஒரு மிகப்பெரிய உந்துதல். பீகாரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஆனந்த்குமார். அப்பா, தபால் ஊழியர், அம்மா அப்பளம் விற்று வந்தார். அரசுப் பள்ளியில் படித்தார். சிறுவயது முதலே கணிதத்தில் புலி. பாடப்புத்தகத்தில் இல்லாத பெரிய பெரிய கணக்குகளையும் போடுவார். அவர் கணிதத்துறையில் ஆய்வுசெய்ய விரும்பினார். கல்லூரியில் கணிதம் படிக்கும்போதே, கணித ஆய்வு இதழ்களுக்கு ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிக்க இடம் கிடைத்தது. ஆனால், பொருளாதாரச் சூழல் ஒத்துவரவில்லை. அவருடைய அப்பாவும் இறந்துவிட்டார். குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, கனவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்தார். அம்மாவோடு சேர்ந்து அப்பளம் விற்றார். அந்தச் சமயத்தில்தான் கணித டியூஷன் எடுக்கலாம் என்ற யோசனை வந்தது.ராமானுஜம் ஸ்கூல் ஆப் மேதமேட்டிக்ஸ் அவருக்கு மிகவும் பிடித்த கணிதமேதையின் பெயரில் டியூஷன் மையத்தைத் தொடங்கினார். கணிதம் என்றாலே ஓடும் மாணவர்கள், கணிதத்தை விரும்ப ஆரம்பித்தார்கள். எளிமையாகக் கணிதம் சொல்லிக் கொடுத்தார். ஒரு சிறிய இடத்தை ஐநூறு ரூபாய் மாத வாடகைக்கு எடுத்துக்கொண்டார். இரண்டு மாணவர்களோடு தொடங்கிய இவரது பயணம், இன்று எண்ணற்றோரைச் சென்று சேர்ந்துள்ளது. அதிகாலை நான்கு மணி முதல் இரவு பதினோரு மணி வரை வகுப்பு எடுக்கிறார். திருப்புமுனை தந்த ஏழை மாணவன்அவரைப் பலரும் எளிதில் அணுக முடிந்தது. ஒருமுறை “எனக்கு ஐ.ஐ.டி.யில் படிக்கணும்னு ஆசை, ஆனால் அதற்கான வசதி இல்லை” என்று ஓர் ஏழை மாணவன் ஆனந்த்குமாரிடம் கூறினான். இதைக் கேட்டதும், வசதி வாய்ப்பு இல்லாத மாணவர்களை ஐ.ஐ.டி.க்கு அனுப்ப வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டது. அதுதான் 'சூப்பர் 30' பயிற்சிப் பள்ளியாக உருவானது. ஒவ்வோராண்டும் 30 மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்து ஐ.ஐ.டி. தேர்வுக்குத் தயார் செய்கிறார். 2002இல் அவர் மனத்தில் உண்டான சிறு பொறி, பலரின் எதிர்காலத்தையே மாற்றிப்போட்டது. “எங்கள் வீட்டில் நான் எங்கு படிக்கிறேன், இது எவ்வளவு பெரிய கல்வி நிறுவனம் என்று எதுவும் தெரியாது. நான் நன்றாகப் படிக்கிறேன் என்பது மட்டும் அவர்களுக்குத் தெரியும்” என்கிறார் சூப்பர் 30 மூலம் ஐ.ஐ.டி.யில் இடம் கிடைத்து, படித்து வரும் ஒரு மாணவர்.ஓராண்டில் பல மாணவர்கள் சூப்பர் 30இல் சேரப்போட்டிபோடுவார்கள். அவர்களுக்குத் தேர்வு வைத்து, 30 பேரை மட்டும் தேர்ந்தெடுப்பார். ஆண்டுக்கு 30 ஏழை மாணவர்கள், அவருடைய வீட்டிலேயே தங்கிப் படிக்கலாம். இதைத் தொடங்கும்போது அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. அவருக்கு டியூஷன் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து, ஐ.ஐ.டி. தேர்வுப் பயிற்சியை அளித்தார். உதவிகளை மறுத்தார்பயிற்சி பெற்றவர்களில், நிறைய மாணவர்களுக்கு ஐ.ஐ.டி.யில் இடம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பலரும் இவருக்கு உதவ முன்வந்தனர். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, சூப்பர் 30 நிறுவனத்துக்கு நிதியுதவி அளிக்க முன்வந்தார். ஆனால், யாரிடமும் ஆனந்த்குமார் உதவி பெறவில்லை. இப்போதும், அவருடைய டியூஷன் வருமானத்தில்தான் சூப்பர் 30 பயிற்சி மையம் செயற்படுகிறது. அவருடைய அம்மாவும், அண்ணனும் அவருக்கு உதவுகின்றனர்.வெற்றிப் படிக்கட்டு2002இல் இவரது பயிற்சிப் பள்ளியில் இருந்து ஐ.ஐ.டி.க்குத் தேர்வானவர்கள் 18 பேர். அதனைத் தொடந்து வெற்றி விகிதம் உயர்ந்துகொண்டே செல்கிறது. சமீப ஆண்டுகளில், 24 முதல் 26 மாணவர்கள் வரை தேர்வு பெறுகின்றனர். இவரது கற்பிக்கும் முறையும் உத்திகளும் வெற்றியை மேம்படுத்தி வருகின்றன.அங்கீகாரமும் கௌரவமும்கேம்பிரிட்ஜில் படிக்க ஆசைப்பட்டார். அறிவாற்றல் இருந்தால் எங்கு வேண்டுமானாலும் புகழ்பெறுவார்கள் என்பதற்கேற்ப, இன்று பல முன்னணி சர்வதேச பல்கலைக்கழகங்களில் கணித உரையாற்ற அழைக்கப்படுகிறார் ஆனந்த்குமார்.டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஆனந்த்குமாரின் பயிற்சி மையம் குறித்த ஆவணப்படம் ஒன்று வெளியானது. ஏழை மாணவர்கள் ஐ.ஐ.டி.யில் சேர்வதற்குப் பயிற்சி அளித்ததால், லிம்கா சாதனைப் புத்தகத்தில் இவர் பெயர் இடம்பெற்றுள்ளது. ஐரோப்பாவின் பிரபல இதழான 'ஃபோகஸ்'(Focus) உட்பட, ஏராளமான வெளிநாட்டுப் பத்திரிகைகள் இவரைப் பாராட்டி எழுதியுள்ளன. ஆனந்த்குமார் பற்றி இந்தியில் திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது.அடுத்த இலக்கு'சூப்பர் 30' திட்டத்தை விரிவாக்க முடிவெடுத்திருக்கிறார். முப்பது மாணவர்கள் என்ற எண்ணிக்கையை உயர்த்தத் திட்டமிட்டு இருக்கிறார். இவரைப் பின்பற்றி, பலரும் ஏழை மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க முன்வருகின்றனர். அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !