ஆச்சரிய வெள்ளி!
டைம் டேபிள் எப்படி போடுகிறார்களோ, தெரியவில்லை. ஒவ்வொரு வாரமும் ஒரே மாதிரியான பாடங்கள். ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான பீரியடுகள். திருப்பித் திருப்பி ஒரேமாதிரியான விஷயங்கள். ஆசிரியர்களுக்குச் சலிப்பு ஏற்படுகிறதோ, இல்லையோ, என்னை மாதிரி ஆட்களுக்கு சீக்கிரமே போர் அடித்துவிடுகிறது.எனக்கு ரொம்பவும் பிடித்தது இயற்பியல். அது செவ்வாயும் வியாழனும் மட்டும் ஒரேஒரு பீரியட் வரும். அந்த வகுப்புகளுக்காகவே காத்துக்கொண்டு இருப்பேன். சில சமயம், இயற்பியல் மிஸ் வரவில்லையென்றால், வேறு ஏதேனும் மிஸ், வகுப்பை எடுத்துக்கொண்டு விடுவார். அவ்வளவுதான், என் ஆசையில் மண் விழுந்துவிடும்.இன்றைக்கும் அப்படித்தான் ஆச்சு. இயற்பியல் மிஸ் வரவில்லை. உமா மிஸ் தான் வந்தார்கள். கிடுகிடுவென ஆங்கிலப் பாடத்தை எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு ஆங்கிலம் படிக்கவே 'மூட்' இல்லை. என் அசுவாரசியத்தை மிஸ் கவனித்து இருக்கவேண்டும். வகுப்பறையைவிட்டு வெளியே போகும்போது கூப்பிட்டார்.“என்னாச்சு கதிர்? ஒரே 'டல்'லா இருக்கே?”“இது ஃபிசிக்ஸ் கிளாஸ் மிஸ். நீங்க எடுத்துக்கிட்டீங்க. ஃபிசிக்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.”“அதனால?”“என்னால கவனிக்கவே முடியல…பிடிச்ச சப்ஜெக்ட் மட்டுமே படிச்சுக்கிட்டே இருந்தா எப்படி இருக்கும்?”“போர் அடிக்கும்!”“இல்ல மிஸ். நிச்சயம் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்.”“அப்ப ஒரு வாரம் முழுக்க ஃபிசிக்ஸே படிக்கலாமா?”“அது சூப்பர் ஐடியா மிஸ். வேற எந்தத் தொந்தரவும் இல்லாம, படிச்சுக்கிட்டே இருக்கலாம். ஒருவாரம் இயற்பியல், இன்னொரு வாரம் கணிதம், அடுத்த வாரம் வேதியல்னு… போனா எப்படி இருக்கும்? யாராவது அப்படி முயற்சி செஞ்சு இருக்காங்களா மிஸ்?”“பண்ணியிருக்காங்க. அதுக்குப் பேரு 'ஃபிளெக்ஸிபிள் ஃப்ரைடே'ன்னு பேரு.”'இணக்கமான வெள்ளிக்கிழமை' என்ற பெயரைக் கேட்டவுடனே எனக்கு உற்சாகம் பொத்துக்கொண்டது. உமா மிஸ் எங்கேயிருந்து இதையெல்லாம் தெரிந்துவைத்திருக்கிறாரோ? விவரங்களைச் சொல்ல ஆரம்பிப்பார் என்று தோன்றியது. “பொதுவா ஸ்டூடண்ட்ஸுக்கு வாரம் முழுக்க ஒரே மாதிரியான பீரியடுகள், ஒரே மாதிரியான ஆசிரியர்கள் என்று போர் அடிக்கலாம். அதனால், வெள்ளிக்கிழமைகளை மட்டும் ஆச்சரியமிக்கதாக ஆக்கியிருக்காங்க….”அதாவது, வெள்ளிக்கிழமை வழக்கமான பீரியடுகள் இருக்காது. அன்று ஏதேனும் ஒரே ஒரு பாடத்தை எடுத்துவைத்துக்கொண்டு, அத்தனை வகுப்புகளும் படிக்கலாம். அதைப் பற்றியே ஆய்வு செய்யலாம். புராஜெக்ட் செய்யலாம். அதை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுகளை விளையாடலாம். ஒரு வெள்ளிக்கிழமை கணிதத்தை எடுத்துக்கொண்டால், அடுத்த வெள்ளிக்கிழமை ஆங்கிலம். அல்லது வேறு ஏதேனும் ஒரு சப்ஜெக்ட். விரிவாக, ஆழமாக, அகலமாக அத்தனை விஷயங்களையும் அன்றே படித்துவிடலாம்.ஒருசில சமயம், அந்தப் பாடம், வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் ரொம்பவும் பிடித்துவிட்டால், அடுத்து வரும் வாரம் முழுக்க, அந்த சப்ஜெக்ட்தான். முழு மூச்சாக, கணிதத்தில் மூழ்கி முத்தெடுக்கலாம். இயற்பியல் சுரங்கத்தில் தங்கம் எடுக்கலாம்.“இதுல இரண்டு சுவாரசியங்கள் உண்டு. அடுத்த வெள்ளிக்கிழமை என்ன பாடம் எடுத்துக்கொள்ளப் போகிறோம் என்பது மாணவர்களுக்குத் தெரியாது. கஷ்டமான பாடமாக இருந்தாலும் அதைப் பற்றியே முழுமையாக, எல்லா வகையிலும் படிக்கும்போது, புரியாத விஷயங்களும் புரிஞ்சுபோயிடும். பாடம் மட்டுமில்ல, வேறு விஷயங்களையும் இந்த வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம்.”“என்ன செய்யலாம் மிஸ்?”“வழக்கமான பாடங்களில் இல்லாத வாழ்க்கைக் கல்வி, தொழிற்சாலை டூர், இசை பயிற்சி, கைத்தொழில் கற்றுக்கொள்வது, விவசாய டூர்… என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.”“ஓ! வாரம் முழுக்க படிக்கறதுக்கு, இது ஒரு ரிலாக்சேஷனா மிஸ்?”“வாரத்துக்கு 40 பீரியடுன்னு ஒரு கணக்கு உண்டு. அது ரொம்ப ஜாஸ்தி, மாணவர்களால கவனம் செலுத்த முடியாதுன்னு நினைக்கறாங்க…”யார் நினைச்சாரோ, அவர் வாழ்க. 40 நிமிஷமே முழுசா வகுப்புகளைக் கவனிக்க முடியல. என்னதான் கண்ணைக் கசக்கிக்கிட்டு கவனிச்சாலும் சாப்பாட்டுக்குப் பிறகு வர பீரியட்டுல தூக்கம் தான் வரும். பாடங்கள் எங்கே மூளையில் ஏறுது?“எப்போ வெள்ளிக்கிழமை வரும்னு மாணவர்கள் காத்திருக்காங்க. ஒரு வகையில படிப்பு, இன்னொரு வகையில ஓய்வு. இரண்டையும் சேர்த்துத் தரும் முறை இது. இதுலேயே இன்னொரு முறை இருக்கு. வெள்ளிக்கிழமை அன்னிக்கு மாணவர்கள் ஸ்கூலுக்கு வரவேண்டாம். அன்னிக்குப் பெற்றோர்கள் லீவு போட்டுட்டு, தங்கள் பிள்ளைகளோட பாடங்கள் படிப்பாங்க, விளையாடுவாங்க… அன்னிக்கும் படிப்புதான் நடக்கும். ஆனால், ஆசிரியர்கள் இருக்கமாட்டாங்க. பெற்றோர்களே ஆசிரியர்களா இருப்பாங்க.”“இது நல்ல ஐடியாவா இருக்கே மிஸ்? இப்படி படிச்சா மார்க் வருமா?”“ரொம்ப நல்லா வரும்னு நிரூபிச்சு இருக்காங்க. வகுப்புங்கற சுமையே இருக்காது. பாடங்களும் சுலபமா புரியும். அப்புறம் மார்க் வாங்காமல் போகமுடியாதே?”நான் என்னுடைய வெள்ளிக்கிழமையை நினைத்துப் பெருமூச்சு விட ஆரம்பித்தேன்!