உள்ளூர் செய்திகள்

தமிழகம்:கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு நெல்!

திண்டுக்கல் மாவட்டத்தில் பழநிக்கு அருகில் உள்ளது 'பொருந்தல்' என்னும் ஊர். முன்பு 'பொருந்தலான இராஜராஜபுரம்' என்று அழைக்கப்பட்டது. இங்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை அகழாய்வு செய்தது. பாசிமேடு என்று அழைக்கப்படும் இடத்தில் அகழாய்வு செய்தனர். அதில், கி.மு. முதல் நூற்றாண்டுக்கும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் (சங்க காலம்) சேர்ந்த செங்கற் கட்டடம் ஒன்றும், கண்ணாடி மணிகள் செய்வதற்காக இயங்கிய தொழிற்சாலை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. பொருந்தலுக்கு அருகில் சின்ன காந்திபுரம் என்னும் ஊரில், நான்கு கால்களுடன் கூடிய ஜாடியில் நெல்மணிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இளஞ்சிவப்பு நிறத்தில் ஆயிரக்கணக்கில் கண்ணாடி மணிகளும் கிடைத்தன.நெல்மணிகள், அமெரிக்காவிலுள்ள 'பீட்டா அனாலிடிக் ஆய்வகத்துக்கு' (Beta Analytic Laboratory - U.S.A) அனுப்பப்பட்டன. அங்கு 'கார்பன் 14'என்ற வயதைக் கண்டறியும் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அதில், இவை கி.மு. 490 முதல் கி.மு. 450 வரையான காலத்தைச் சேர்ந்தவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நெல்மணிகள் விதைக்கப்பட்டு பயிரிடப்பட்டதா? நாற்றாக உற்பத்தி செய்து பயிரிடப்பட்டதா என்ற நோக்கிலும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.- கி. ஸ்ரீதரன்தொல்லியல் ஆய்வாளர் (ஓய்வு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !