திணிப்புக்கு எதிராக திரண்ட தமிழர்கள்!
இந்தியாவில் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். அரசின் ஆட்சி மொழியாக வெவ்வேறு மொழிகளைப் பயன்படுத்துதல், நிர்வாகத்திற்கு ஏற்புடையதன்று. அதனால், ஒரே மொழியாக அரசின் மொழி அமைவதுதான் ஏற்புடையது என்று, மத்தியில் உள்ள அரசாங்கத்தார் கருதினர். அதன்படி பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியான,'இந்தி'யை, நாட்டின் ஆட்சிமொழியாக்குவது என்ற எண்ணம் தோன்றியது. விடுதலைப் போராட்ட உணர்ச்சியைத் தூண்டுவதில்கூட, பல்வேறு மொழி இடையூறுகள் இருந்தமையால்தான், இந்தியும் உருதும் கலந்த இந்துஸ்தானி மொழியில் காங்கிரஸ் பேரியக்க அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. நாடு முழுவதும், ஒரே மொழி இருப்பது எல்லாவகையிலும் நல்லது என்ற கருத்தில், 'இந்தி பிரசார சபை' போன்ற அமைப்புகளும் நிறுவப்பட்டன. இந்துஸ்தானி மொழி கற்பதற்காக, நாடு முழுவதும் இந்த அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களில், இதற்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. 1937ம் ஆண்டு நடந்த, சென்னை மாகாணத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. சென்னை மாகாண முதலமைச்சராக 'இராஜகோபாலாச்சாரியார்' பதவியேற்றார். அவர் பதவியேற்றதும், அரசாங்கத்தின் ஆட்சிமொழியாக படிப்படியாக இந்தி மொழி ஆக்கப்படும் என்ற கொள்கை வரைவை முன்வைத்தார். வேலைவாய்ப்புகளுக்கு இந்தி கற்பது மிகவும் இன்றிமையாதது என்பது, இராஜாஜியின் நிலைப்பாடாக இருந்தது. அதற்கான முன்னோட்டமாக, நூறு பள்ளிகளைத் தேர்வுசெய்து, அவற்றில் இந்தி கற்பிப்பதைக் கட்டாயமாக்கினார். அரசின் இந்தப் போக்குக்கு, தமிழ் மக்களிடத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. மறைமலையடிகளார், பாரதிதாசன், ஈ.வெ.ரா. ஆகியோர், அரசின் இம்முடிவைக் கடுமையாக எதிர்த்துப் போராட்டத்தில் குதித்தனர். தமிழ்மொழியை அழிக்கும் முயற்சி என கூறினர். ஆங்காங்கே நடந்த மறியல் ஆர்ப்பாட்டங்களால், நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தாளமுத்து, நடராசன் ஆகிய இரு தொண்டர்கள், காவல் துறையின் கைதுக்குப் பின் இறந்தனர். மொழிக்காக உயிர் நீத்தமையால் அவ்விருவரும் “மொழிப்போர்த் தியாகிகள்” என்று அழைக்கப்பட்டனர். இந்தி எதிர்ப்புப் போராட்டம் கட்டுக்கடங்காமல் பரவியது. அதனால், அரசு 1940ம் ஆண்டில், இந்தித் திணிப்பு முயற்சியைக் கைவிட்டது. பிறகு சுதந்திரம் பெற்றபின், 1950ம் ஆண்டில், ஓர் ஆட்சி மொழிக்கொள்கை உருவாக்கப்பட்டது. அதன்படி அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு, இந்தியும் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கும் என்றும், பிறகு ஆங்கிலம் நீக்கப்பட்டு இந்தி மட்டுமே ஆட்சி மொழியாகத் தொடரும் என்றும் அந்தச் சட்டம் கூறியது. அதன்படி 1965ம் ஆண்டில், இந்தியே ஆட்சிமொழியாகும் என்ற நிலைமை தோன்றியது. இந்த நிலைமை, மீண்டும் தமிழகத்தில் எதிர்ப்பைக் கிளப்பியது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த போராட்டத்தைவிடவும், இப்போது இன்னும் தீவிரமானது. கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்று திரண்டு, கட்டாயமாக இந்தியை கற்கும் நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆங்காங்கே வன்முறை நிகழ்வுகளும் நடந்தன. இப்போராட்டத்தில், அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தினர் முனைந்து ஈடுபட்டனர். வன்முறைகளால் எழுபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1967ம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தது. அவ்வமயம் நடுவணரசின் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்ற இந்திரா காந்தி “இனி என்றென்றைக்கும் அரசின் ஆட்சி மொழியாக இந்தியும் ஆங்கிலமும் இருக்கும்” என்ற சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தார். அதன் பின்னரே, இந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்று அவரவர் தாய்மொழியுடன் ஆங்கிலம் கற்கும் நிலைமை இருக்கிறது. இந்தி தேவையானால் மூன்றாவது மொழியாக கற்றுக்கொள்ளலாம். அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.மொழி, பண்பாட்டின் மீது மூக்கை நுழைத்தால், ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் மக்கள் எதிர்ப்பார்கள். அப்படித்தான், நம் மாநிலத்திலும் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது.- மகுடேசுவரன்