ஆமை காக்க, அணி திரளுங்கள்!
சென்னை மெரினா மற்றும் இதர கடற்கரை பகுதிகளுக்கு ஆமைகள் முட்டையிட வருகின்றன. ஆனால், கரைப் பகுதிகளில் அதிகரித்து வரும் குப்பைகளால் ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. இதுபோல் எண்ணற்ற சூழலியல் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன ஆமைகள். அதைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடல் ஆமைகளைப் பாதுகாக்க விழிப்புணர்வு ஓட்டம் ஒன்று, சென்னை பாலவாக்கம் கடற்கரையில் வரும் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. 'ரிட்லே ரன்' ஒருங்கிணைப்பாளர் முகம்மது சுலைமானிடம் பேசினோம்:“இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை நான்காம் ஆண்டு நடத்தவிருக்கிறோம். முன்பைவிட, மக்கள் மத்தியில் ஆமைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதிகாரிகள், அரசாங்கத்தின் பல்வேறு துறையினர், சென்னை மாநகராட்சி, வனத்துறை ஆகியோர் உதவுகின்றனர். கடற்கரை ஓரம் உள்ள வியாபாரிகள் முதல் அங்கே வரும், பொதுமக்கள் வரை அனைவரும் ஒருங்கிணைந்த முறையில் ஆமைகள் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.கரையோரம் குப்பைகள் கிடந்தால், அவற்றை தொட்டியில் எடுத்துப்போடச் சொல்லி கடைக்காரர்கள் வற்புறுத்துகிறார்கள். ஆமை முட்டையிடுவதற்கு இந்த இடங்களுக்கெல்லாம் வர வாய்ப்பு இருக்குமென்பது அவர்ளுக்குப் புரியத் தொடங்கியிருக்கிறது. அதனால் தான், கடற்கரைப் பகுதியைச் சுத்தமாக வைத்திருக்க அவரவர் முடிந்த வகையில் உதவுகின்றனர்.டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் காலம். அந்த ஐந்து மாதங்களில் சென்னை மெரினா, பெசன்ட் நகர் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் இரவு 11 மணிக்கு மேல் விளக்குகள் அணைக்கப்பட்டு வருகின்றன. விளக்குகளால் ஆமைகளுக்குத் தொந்தரவு என்பதால் மாநகராட்சி, வனப்பாதுகாப்பு துறை இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர்.இது போதாது. இன்னும் விரிவான அளவுக்கு மக்களிடம் விழிப்புணர்வு தேவை. அதனால் தான் இந்த ஆண்டும் ரிட்லே ரன் நிகழ்ச்சியை நடத்துகிறோம்.பள்ளி, கல்லூரி மாணவ/ மாணவியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஓவியப் போட்டி, மணற்சிற்ப போட்டி, சோப்பில் சிற்பம் உருவாக்கும் போட்டிகளையும் நடத்தி வருகிறோம்.மேலும், மாதாமாதம் குறுஞ்செய்திகள், போஸ்டர்கள் போன்ற விழிப்புணர்வு செயல்பாடுகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் நிறைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வரும்காலத்தில் நடத்த திட்டம் உள்ளது.ஆமைகள் குடும்பத்தைக் காப்பாற்ற குடும்பத்தோடு மக்கள் வரவேண்டும். தொடர்ச்சியான விழிப்புணர்வு மூலம் மட்டுமே ஆமை இனங்கள் அழிக்கப்படுவதை தடுக்க முடியும்.”ஒரு பெண் ஆமை 13 வருடங்கள் கழித்து, எந்த கடற்பகுதியில் வந்து முட்டையிட்டதோ, அதே பகுதிக்கு தான் மீண்டும் முட்டையிட வருமாம்.