அணி அணியாய்!
நம் வீட்டின் அலமாரியில் துணிகளையும், பொருட்களையும் வெவ்வேறு தட்டுகளில் வரிசையாக அடுக்குகிறோம் அல்லவா. கணிதத்தில் இப்படி அடுக்குவதை 'அணி' (Matrix -மேட்ரிக்ஸ்) என்று அழைக்கிறோம். கிடைமட்ட வரிசைக்கு 'நிரை' (Row - ரோ) என்றும், செங்குத்து வரிசைக்கு 'நிரல்' (Column - காலம்) என்றும் பெயர். ஆக, அணிகள் குறிப்பிட்ட முறையில் பொருட்களை அடுக்கும் பண்பை வெளிப்படுத்துகின்றன.உங்களிடம் நட்சத்திர வடிவிலான பொருட்கள் 6 கொடுக்கப்படுகின்றன. அவற்றை எவ்வாறெல்லாம் சரியான வரிசையில் அடுக்கலாம்?படத்தில் உள்ளது போல மொத்தம் நான்கு வழிகளில் அடுக்க முடியும். இந்த நான்கு அமைப்புகளில், ஒவ்வொரு அமைப்பும் ஓர் அணியாக அமைகிறது. எனவே, ஆறு பொருட்களில் நான்கு அணிகளை உருவாக்கலாம்.உங்கள் வீட்டில் இது மாதிரி தினமும் அடுக்கி இருப்பீர்கள். ஆனால், ஒவ்வொரு அடுக்கு முறையும் ஓர் அணியைக் குறிக்கும் என நீங்கள் நினைத்ததுண்டா?இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி! ஆறு பொருட்களுக்கு நான்கு அணிகள் உருவாக்கியது போல, பன்னிரெண்டு பொருட்களுக்கு எத்தனை அணிகள் கிடைக்கும்? மேலும், பொருட்களின் எண்ணிக்கைக்கும் அதன் மூலம் பெறப்படும் அணிகளின் எண்ணிக்கைக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என யோசியுங்கள்!விடை: ஆறு அணிகளை உருவாக்கலாம்.இரா. சிவராமன்,நிறுவனர், பை கணித மன்றம்