தகவல் சொல்லிகள்
உலகில் பெரும்பாலான வீடுகளில், காலை எழுந்து பல்தேய்த்தவுடன், மக்கள் செய்கிற முதல் வேலை, செய்தித்தாளைத் திறப்பதுதான்.வானொலி, தொலைக்காட்சி, இணையம், மொபைல் தொழில்நுட்பங்கள் என்று காலம் எவ்வளவோ மாறிவிட்டது. ஆனாலும், செய்தித்தாள்களுக்கு முக்கியத்துவம் குறையவில்லை. இணையத்திலும் அதே செய்தித்தாள்கள் வருகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் செய்தித்தாள்களில் வரும் முக்கியச் செய்திகளை முன்வைத்து விவாதிக்கிறார்கள். மொபைலில் உட்கார்ந்த இடத்தில் அத்தனை செய்தித்தாள்களையும் படிக்க முடிகிறது.செய்தித்தாள்கள் ஒவ்வொருநாளும் வெளியாகின்றன என்பதால், அவற்றை 'நாளிதழ்கள்' என்கிறோம். இதேபோல் வாரந்தோறும் வருபவை 'வார இதழ்கள்'. மாதம் ஒருமுறை வருகிற 'மாத இதழ்கள்', மாதமிருமுறை இதழ்கள், வாரமிருமுறை இதழ்கள், காலாண்டிதழ்களெல்லாம் உண்டு. அச்சிதழ்களோடு மின்னிதழ்கள், ஒலியிதழ்கள், வீடியோ இதழ்களெல்லாம்கூட வருகின்றன.இப்படித் தொடர்ந்து வாசகர்களின் அறிவுப்பசிக்குத் தீனி போட்டுக்கொண்டிருக்கும் இதழ்களில் பணியாற்றுவோரை, 'இதழாளர்கள்' என்கிறார்கள். பல நாடுகளில் பல ஊடகங்களில் லட்சக்கணக்கான இதழாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். மிகுந்த அறிவையும் உழைப்பையும் கோரக்கூடிய பணி இது.செய்திகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். அவைபற்றிய கூடுதல் விவரங்களைச் சேகரிக்க வேண்டும். நிபுணர்களின் கருத்துகளைச் சேர்க்க வேண்டும். அவற்றைச் சுவையாகவும் விரைவாகவும் எழுதித்தர வேண்டும்பிழையின்றி எழுதத்தெரிய வேண்டும், அதேபோல், வாசிப்போர் விரும்பும்வண்ணம் எளிய, இனிய நடையும் வேண்டும்.மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து, நல்ல, பயனுள்ள கட்டுரைகள், கதைகள், கவிதைகள் போன்றவற்றைச் சிறந்த வடிவமைப்புடன் வழங்க வேண்டும்.உங்களுக்கு இதழாளராகும் விருப்பம் உண்டா? அதற்கான தொடக்கம் உங்கள் பள்ளியிலேயே இருக்கக்கூடும்.பல பள்ளிகளில், மாணவர் இதழொன்று நடத்தப்படும். அவை மாதம் ஒன்றாகவோ ஆண்டுக்கு ஓரிரு பிரதிகளாகவோ வெளிவரக்கூடும். அந்த இதழில் வெளிவரும் படைப்புகள், செய்திகள், ஓவியங்கள் என அனைத்தையும் மாணவர்களேதான் (ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன்) எழுதுவார்கள், தேர்ந்தெடுப்பார்கள், திருத்தம் செய்வார்கள்.அப்படிப்பட்ட மாணவர் இதழ், உங்கள் பள்ளியில் உண்டென்றால், அதைத் தேடிச்சென்று வாசியுங்கள். அதில் என்ன மாதிரி படைப்புகள் வெளியாகின்றன என்று கவனியுங்கள். அதன் இதழாளர் குழுவில் பங்கேற்க என்ன தகுதி என்று விசாரியுங்கள்.அதேபோல், உங்கள் வீட்டருகே இருக்கும் நூலகத்துக்குச் சென்று, அங்கே கையெழுத்து இதழ்கள் எவையேனும் வெளியாகின்றனவா என்று விசாரியுங்கள். இவற்றிலும் உங்களைப்போல் ஆரம்பநிலை எழுத்தாளர்கள், இதழாளர்களுக்கு எளிதில் வாய்ப்புகள் கிடைக்கும். எப்படியாவது உள்ளே நுழைந்துவிட்டால், ஏராளமாகக் கற்க வாய்ப்புண்டு.ஒருவேளை, உங்கள் பகுதியில் அப்படிப்பட்ட மாணவர் இதழ், உள்ளூர் இதழ் எவையும் இல்லாவிட்டால்?அது இன்னும் வசதி. உங்கள் ஆசிரியரின் உதவியுடன் நீங்களே ஒரு மாணவர் இதழைத் தொடங்குங்கள். கையில் எழுதி வெளியிடும் 'கையெழுத்து இதழாக' இருந்தாலும் பரவாயில்லை, கணினியில் வடிவமைத்து அச்சிடும் இதழானாலும் பரவாயில்லை, கற்றுக்கொள்வதற்கு எந்த ஊடகமும் நல்லதுதான்!- என். சொக்கன்