நவீன ஓவியத்தின் தந்தை
பாப்லோ பிகாசோ25.10.1881 - 8.4.1973மலகா, ஸ்பெயின்'நீங்கள் வரையும் நவீன ஓவியங்கள் புரியவில்லையே?' என அவரிடம் ஒருவர் கேட்டபோது, “குயிலின் கூவும் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா? வீட்டுக் கண்ணாடியில் மென்மையாகப் படியும் பனித்துளியை எந்த அர்த்தத்தில் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்? வெயிலை, இரவை, மழையை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறீர்கள்? எல்லாவற்றிலும் மனதாரக் கரையுங்கள்; எல்லாவற்றுக்குள்ளும் நீங்கள் இருப்பதை உணருங்கள்; உலகின் காட்சிகளும் அதன் வனப்பும் உங்களுக்குப் புரியத் தொடங்கினால், நவீன ஓவியங்களும் புரியும்” என்று பதில் அளித்தார் பிகாசோ.பிகாசோவின் குடும்பம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது. தனது 7வது வயதிலேயே தேர்ந்த ஓவியனைப் போல ஓவியங்கள் வரைய அவரது தாயார் ஒரு காரணமாக இருந்தார். அவருடைய தந்தையும் ஓவியராக இருந்ததால், ஊக்கப்படுத்திப் பயிற்சியளித்தார். 14 வயதில் பாரம்பரிய ஓவியக்கலையையும், சிற்பங்கள் செய்யவும் நன்கு கற்றுக்கொண்டார் பிகாசோ.பிகாசோ ஓவியங்களைப் பல்வேறு காலப்பகுதிகளாகப் பிரித்துக் கூறுகிறார்கள்.நீலக் காலம் (1901 - 1904): இந்தக் காலகட்டத்தில், நீலநிறச் சாயம் கொண்ட ஓவியங்களாக வரைந்தார். கழைக் கூத்தாடிகள், பிச்சைக்காரர்கள், கலைஞர்கள் போன்றவர்களைப் பெரும்பாலும் சித்திரித்தார்.ரோஜா நிறக் காலம் (1904 - 1906): இந்தக் காலகட்டத்தில், ரோஜா நிறச் (pink) சித்திரங்களாக வரைந்தார். இளைஞர்கள், தலைமுடி வாரும் பெண், நீச்சல் வீரர்கள், குடும்பம், வானர மனிதர்கள் போன்றோர் ஓவியத்தில் இருந்தனர்.ஆப்பிரிக்க செல்வாக்குக் காலம் (1908 - 1909): ஆப்பிரிக்க கலைப் பொருட்களின் அடிப்படையில் வரைந்த ஓவியங்கள் முதன்மை பெற்றிருந்தன.பிகாசோ பற்றிச் சில திரைப்படங்கள் வந்துள்ளன. அதில், 1955ல் வெளியான 'த மிஸ்டரி ஆஃப் பிகாசோ' முக்கியமான திரைப்படம். பிகாசோவை நேரடியாக ஓவியங்கள் வரையச் செய்து அதனைத் திரைப்படமாக்கினார்கள். கியூபிசம் என்கிற புதிய ஓவியப் பாணியை அறிமுகப்படுத்தி, கலை உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தினார். அமைதிச் சின்னமான புறாவையும், ஆலிவ் இலைகளையும் பிரபலப்படுத்தினார். 90வது வயதிலும் தன்னுடைய தூரிகையைக் காயவிடாமல் பார்த்துக் கொண்ட பிகாசோ வரலாற்றில் தனக்கென ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.குவர்னிகா: பிகாசோவால் வரையப்பட்ட பிரபல ஓவியம். முதலாம் உலகப்போரில் ஸ்பெயினின் குவர்னிகா நகரில் குண்டு வீசப்பட்டதை மையமாகக் கொண்டு வரையப்பட்டது