கிரேட் பேரியர் பவளப்பாறை இன்னும் அழியவில்லை
ஆஸ்திரேலியா நாட்டின் கடல்பகுதியில் அமைந்துள்ள, உலகின் மிகப்பெரிய பவளப்பாறையான 'கிரேட் பேரியர்' அழிந்துவிட்டதாக வெளியான தகவலை விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவின், யின்ஸ்லாந்து கடற்கரைப் பகுதியில், சுமார் 1400 மைல் நீளத்திற்கு 'கிரேட் பேரியர்' எனும் பவளப்பாறைகள் அமைந்துள்ளன. இது, பல ஆயிரம் வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழும் முக்கிய இடமாக திகழ்கிறது. கிரேட் பேரியர் பவளப்பாறைகள், 25 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. சமீபகாலமாக, கடல்நீரின் வெப்பம் அதிகரித்ததால், பவளப்பாறைகள் வெளிறி வந்தன. அதை தடுக்க, ஆஸ்திரேலியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், 'கிரேட் பேரியருக்கு இரங்கள் செய்தி' என்ற தலைப்பில் பவளப்பாறைகள் மரணித்து விட்டதாக, 'அவுட்சைடு' என்ற பத்திரிகையில் சில நாட்களுக்கு முன் கட்டுரை வெளியானது. இதை சமூக வலைதளங்களில், மிக வேகமாக பலரும் பகிர்ந்து கொண்டனர்.ஆனால் இத்தகவலை தற்போது விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர். 'அடிப்படை ஆதாரமற்ற செய்திகள் வெளியிட்டு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம், யாரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தக்கூடாது. கிரேட் பேரியர் பவளப்பாறைகள், தற்காலிக சூழல் பிரச்னையில் சிக்கியுள்ளதே தவிர, ஒரேடியாக மரணிக்கவில்லை. அதற்கு தற்போது சாத்தியமும் இல்லை' என்று பவளப்பாறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.