உள்ளூர் செய்திகள்

சிறிய விஷயங்களின் பெரிய அறிவியல்

டியூபை பிதுக்கினால் மட்டுமே பற்பசை ஏன் வெளிவருகிறது? மூடியைத் திறந்து, சாய்த்ததும் ஏன் வெளிவருவதில்லை? இந்த விஷயங்களில், மிகப் பெரிய அறிவியல் அடங்கி இருக்கிறது. இதுகுறித்த ஆய்வுகளில் ஈடுபடும் விஞ்ஞானிகள், பொதுமக்களிடையே தங்களது அறிவியல் துறை பற்றி உரையாற்றினால் எப்படி இருக்கும்?சென்னை தரமணியில் உள்ள 'இன்ஸ்டிடியூட் ஆஃப் மேத்தமெட்டிகல் சயின்சஸ் நிறுவனம்' (-IMSC), ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் ஞாயிற்றுக்கிழமையில், அறிவியல் தொடர்பான பொது உரையாடல் நிகழ்ச்சியை மக்களுக்காக நடத்தி வருகிறது. 'சயின்ஸ் அட் சபா' என்ற பெயரில், சென்னை மியூசிக் அகாதெமியில் இந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியில், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவுகளில் தலா ஒன்றாக, நான்கு உரைகள் நிகழ்த்தப்பட்டன. நிகழ்ச்சியின் சுருக்கமான தொகுப்பு.உலகை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம்?ஜன்னல் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் ஒரு தண்ணீர் பாட்டில், நம் கண்களுக்கு முழுமையாகத் தென்படாது; அரைகுறையாகவே தெரியும். என்றாலும், தண்ணீர் பாட்டிலைப் பார்த்துப் பழகியிருக்கும் நமக்கு, ஜன்னலுக்குப் பின்னால் இருப்பது தண்ணீர் பாட்டில்தான் என நம் மூளை புரியவைத்துவிடுகிறது. இப்படி, நம்மைச் சுற்றி இருக்கும் விஷயங்களை, குறிப்பிட்ட வகைகளில் மூளை நமக்கு உணர்த்தாவிட்டால் என்ன ஆகும்?புதருக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஒரு புலியின் கண்கள் மட்டுமே நமக்குத் தென்பட்டாலும், 'அது புலிதான்' என்பதை இந்தப் பண்புதான் நமக்கு உணர்த்துகிறது. இப்படிப்பட்ட தகவல்களை வழங்கி, மூளை, உணர் நரம்புகளின் செயற்பாடுகள் பற்றிய அடிப்படைகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் விதத்தில், மும்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் நரம்பியல் விஞ்ஞானி ஷீபா தோலே விளக்கினார்.காலம் ஏன் முன்னோக்கிச் செல்கிறது? ஒரு பாத்திரத்தில் இருக்கும் நீரில் ஒரு சொட்டு மையை ஊற்றுகிறோம். நீரில் மை கலக்கும். நீர் மூலக்கூறுகளுடன் அல்லது அணுக்களுடன் இணைந்த மையின் மூலக்கூறுகள், மீண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்து முன்பிருந்த மைத்துளியாக மாறமுடியுமா? இயற்பியல் விதிகள்படி ஒரு விஷயம் முன்னோக்கியும், பின்னோக்கியும் நடக்க வாய்ப்புள்ளது. என்றாலும், ஏன் நிகழ்வுகள் முன்னோக்கி மட்டுமே நடக்கின்றன? என்பதை IMSC யின், ஸ்டாஸ்டிகல் மெக்கானிக்ஸ் துறை விஞ்ஞானி ஆர். ராஜேஷ் விளக்கினார். கடினமான, மென்மையான, இழுவையான பொருட்கள்டப்பாவில் உள்ள தண்ணீரை ஒரு குத்துவிட்டால் என்ன ஆகும்? தண்ணீர் தெறித்துச் சிதறும். தண்ணீரின் பரப்பில் துப்பாக்கியால் சுட்டால் என்ன ஆகும்? நீர் சிதறித் தெறிப்பதுடன், டப்பாவில் தோட்டா பாய்ந்து ஓட்டை விழும். அதுவே, டப்பாவில் சோளப் பசை, தண்ணீர் கலந்து கெட்டியான பாகு பதத்தில் இருந்தால், நாம் குத்தும்போது, பசை தெறிக்காது. பசையின் மேற்பரப்பு சிறிது அதிர்ந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும். பசையின் அடிப்பகுதியில் எந்த சலனமும் ஏற்படாது. பசையின் பரப்பில் துப்பாக்கியால் சுட்டால்கூட, பசையின் மேற்பரப்பில் மட்டும் தோட்டா சிறிது அதிர்வை ஏற்படுத்திவிட்டு, பசைக்குள் மூழ்கிவிடும். பசையின் ஆழம்வரை பாய்ந்து பாத்திரத்தைத் துளையிடாது. 'புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்' எனப்படும் தோட்டா துளைக்காத உடுப்புகளுக்கு இத்தகைய வேதியியல் விஷயங்கள்தான் அடிப்படை என, சிறு குழந்தைகளும் புரிந்துகொள்ளும் விதத்தில் விளக்கினார் CSIR, புனேவின் தேசிய ரசாயன ஆய்வகத்தில் விஞ்ஞானியாகப் பணிபுரியும் குரு குமாரசாமி. எத்தனை முறைகளில் ஷூ நாடாவை முடிச்சுப்போடலாம்?எத்தனை வகையான முடிச்சுகள் உள்ளன? ஒரு வகை முடிச்சுக்கு, அதன் கண்ணாடி பிம்பம் போன்ற, இன்னொரு வகை முடிச்சு அமையுமா? 'கைரலிட்டி' (Chirality) எனப்படும் இந்தப் பண்பு உள்ளதா என்பதை எப்படிக் கண்டறிவது? கைரலிட்டி பண்பு கொண்ட ஒரு மூலக்கூறு இரண்டு வடிவங்களில் இருக்கும். இரண்டும் வெவ்வேறு தன்மையுடன் இருக்கும். ஒன்று உயிர்காக்கும் மூலக்கூறாகவும், இன்னொன்று உயிர்க்கொல்லியாகவும் இருக்க வாய்ப்புள்ளது. அவற்றின் வேறுபாடு தெரியாமல், இரண்டும் ஒன்றுதான் என்று மருந்தாகப் பயன்படுத்தினால், மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை IMSC யின் கணிதவியல் துறை பேராசிரியராகப் பணியாற்றும் விஜய் கொடியாலம் விளக்கினார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உரையின் இடையிடையே எழுப்பிய கரகோஷங்கள், 'விஞ்ஞானிகள் பேசுவது பொதுமக்களுக்குப் புரியாது' என்ற பொதுக்கருத்தை உடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !