கூரையை பிய்த்துக்கொண்டு விழுந்த குட்டியானை
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது கோழிப்பாறை கிராமம். இங்கு, கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில், ஒரு தாய் யானையும், மூன்று மாத குட்டி யானையும் பலாமரத்தில் பழம் பறித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அப்போது, குட்டி யானை கீழே கிடந்த பிளாஸ்டிக் தாளில், தவறுதலாக காலை வைத்தது. இதையடுத்து, கால் வழுக்கி அங்கு தாழ்வான பகுதியில் உள்ள வீட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு விழுந்தது.இதனால், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவத்தில் ஒருவர் லேசான காயம் அடைந்தார். வீட்டுக்குள் விழுந்த குட்டியானை, எதைப்பற்றியும் கவலைப்படாமல், வீட்டுக் கதவை உடைத்து வெளியேறி, தாயுடன் சேர்ந்து காட்டுக்குள் சென்று விட்டது.