உலகப்போர் என்ற பெயர்
வரலாற்றுப் புத்தகத்தில், உலகப்போர்களைப் பற்றிய பாடம் மிகவும் முக்கியமானது. முதலாம் உலகப்போர் வெடிக்கக் காரணம் என்ன என்று கேட்டால், ஆஸ்திரிய இளவரசரை செர்பியர் ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் என்று சொல்வோம். இந்தக் கொலைக்குப் பதிலடி கொடுக்க ஆஸ்திரியா, ஜெர்மனியின் ஆதரவோடு செர்பியா மீது போர் தொடுத்தது; செர்பியாவைக் காப்பாற்ற ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் இணைந்து போரிட்டன என்றெல்லாம் பாடத்தில் விவரிக்கப்பட்டு இருக்கும். 'ஒரு இளவரசர் கொலைக்காக 5 கோடி இராணுவ வீரர்களைக் களத்தில் இறக்கி, ஒரு கோடி பேரைப் பலி வாங்கும் ஒரு போரை ஐரோப்பிய நாடுகள் ஏன் நடத்த வேண்டும்?' என்ற கேள்வி எழுகிறது. அன்றைக்கு ஐரோப்பாவில் போர்ச்சுகல், ஸ்பெயின், ஹாலந்து, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகள் ஆதிக்க நாடுகளாக இருந்தன. உலகின் பெரும்பாலான பகுதிகள் மீது ஆதிக்கம் செலுத்தி அவற்றைத் தங்கள் காலனிகளாகக் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தன. ஜெர்மனிக்கு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம்வரை ஆதிக்கம் செலுத்த காலனிகள் எதுவும் கிடையாது. பிற ஐரோப்பிய நாடுகளைப்போல, தானும் ஓர் அதிகார மையமாகிப் பொருள் ஈட்ட வேண்டும் என்ற ஆசையில், அது ஆப்பிரிக்கா மற்றும் சீனாவின் சில பகுதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அந்தப் பகுதிகள் ஏற்கனவே ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. இதனால், ஜெர்மனிக்கு அந்த நாடுகளுடன் மோத வேண்டிய சூழல்.இந்தச் சமயத்தில் நடந்த ஆஸ்திரிய இளவரசர் கொலைச் சம்பவத்தை ஜெர்மனி பயன்படுத்திக் கொண்டது. ஆஸ்திரியா, இத்தாலி ஆகிய நாடுகளுடன் அணி சேர்ந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யக் கூட்டணியை எதிர்த்துப் போரிட்டது. இரண்டு அணிகளிலும் பல்வேறு நாடுகள் இணைந்துகொண்டதால், மிகப் பெரிய போராக அது உருவெடுத்தது. 'நாடு பிடிக்கும் ஆசையில் நடைபெற்ற இந்தப் போருக்கு ஏன் உலகப்போர் என்று பெயர் வந்தது?' என்ற கேள்வி எழலாம். இன்றைக்கு உலகில் 196 நாடுகள் இருக்கின்றன. ஆனால் அன்றைக்கு இருந்தது வெறும் 59 நாடுகள். அவற்றில் 38 நாடுகள் இந்தப் போரில் கலந்துகொண்டன. பெரும்பாலான நாடுகள் கலந்துகொண்ட போர் என்பதால் முதல் உலகப் போர் என்று அழைக்கப்படுகிறது.