உள்ளூர் செய்திகள்

கோல்லாகலம் ஆரம்பம்!

உலகமெங்கும் கால்பந்து ஜுரம் ஆரம்பித்துவிட்டது. நம்ம ஊரையும் விட்டுவைக்குமா என்ன? கிரிக்கெட்டில் கவனம் செலுத்தியவர்கள், தற்போது 'உதைவிழா'வை ரசிக்கத் தயாராகிவிட்டார்கள். நம்ம ஊரில் உதை விளையாட்டுக்கு என்ன முக்கியத்துவம் தரப்படுகிறது? சென்னை பி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி இன்று லண்டன் வேல்ஸ் பல்கலைக்கழகம் வரை சென்று கலக்கும் அதிதி ராஜகோபாலனிடம் பேசினோம்:“நான் ஃபிஃபாவின் பெரிய ரசிகை. அதுவும் ஸ்பெயின்தான் ஜெயிக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்கேன். கிறிஸ்டினா ரொனால்டோ என் ஹீரோ. இந்த ஆர்வத்துக்கு ஆரம்பம், ஜிம்னாஸ்டிக்ஸ். இரண்டரை வயசுல எதார்த்தமா, ஜிம்னாஸ்டிக்ஸில் சேர்ந்தேன். அங்கேயிருந்து அப்படியே கால்பந்துக்குப் போனேன். இன்னிக்கு கால்பந்துதான் என் வாழ்க்கைன்னு மாறிடுச்சு.கால்பந்து விளையாட்டுல நான் இவ்வளவு தூரம் வந்ததுக்கு முக்கிய காரணம் காளிதாஸ். அவர்தான் என் கோச், என் குரு. கால்பந்துனாலே, ஆம்பளைங்க விளையாட்டுன்னு சொல்வாங்க. பந்து பின்னாடி ஓடிட்டே இருக்கணும். 90 நிமிஷம் விளையாட்டுதான் என்றாலும், நிறைய எனர்ஜி வேணும். விளையாடும்போது அடி,தடி, தள்ளு முள்ளு எல்லாமே இருக்கும். காயம் சர்வ சாதாரணம். முரட்டுத்தனமா விளையாட்டை பெண்கள் விளையாடணுமா என்று நிறையபேர் கேட்பாங்க. ஆனா, நான் ரொம்ப கொடுத்து வச்சவ. அப்பா, அம்மா, அண்ணன், உறவினர்கள் எல்லோருமே எனக்குப் பக்கபலம். நான் ஒரே ஒரு கோல் போட்டாலும் என்னைப் பாராட்டுவாங்க. நான் ஸ்கூல் படிக்கும்போது போட்டிகள் ரொம்ப குறைவாத்தான் வரும். ஆனா, இப்போ ரொம்பவே மாறியிருக்கு. மாநில அளவில், தேசிய அளவில் நிறையப் போட்டிகள் வந்திட்டு இருக்கு. ஆனா, இன்னும் நம்ம ஊர்ல நிறைய பேர் விளையாட வரணும். நிறைய பேர் படிப்பையும், விளையாட்டையும் பேலன்ஸ் செய்ய முடியலன்னு விளையாட்டை விட்டுருவாங்க. சின்ன வயசுல இருந்து படிப்பையும், விளையாட்டையும் எப்படி பேலன்ஸ் செய்யணும்னு கத்துக்கிட்டேன். அததுக்கான நேரத்தை சரியா ஒதுக்கிடுவேன்.காலையில எழுந்ததும் உடற்பயிற்சி. அதுக்கு அப்பறம் ஸ்கூல். பின்னர் கால்பந்து பயிற்சி. பின்னர் வீட்டுக்கு வந்து அன்னிக்கு ஸ்கூலில் கொடுத்த வேலையை முடிச்சுட்டு தூங்கிடுவேன். இதுதான் என்னோட ஒருநாள். இதுல மத்த விஷயங்களுக்கு நேரமே இருக்காது. நண்பர்களோட வெளியில போறது, படங்கள் பார்க்கறது என்று எதுக்குமே நேரம் சுத்தமா இருக்காது. என்னோட வாழ்க்கையில எது முக்கியம்னு என்னை நானே கேட்டுப்பேன். நாம எவ்வளவு தியாகம் செய்யறோமோ அதே அளவுக்கு பெரிய பலன் கிடைக்கும்ங்கறது என் நம்பிக்கை. ஏன்னா, சிலசமயம் நம்மால மத்தவங்க மாதிரி வெளியில போக முடியலையேன்னு தோணும்; ஆனா, இந்த வைராக்கியம் தான் என்னைக் காப்பாத்துச்சு. இந்த விளையாட்டுல கீழே விழுவோம். அடிபடும்; ஆனா அது பெரிய விஷயமாகவே தெரியாது. விளையாடும்போது கோல் மட்டும்தான் என்னோட கவனத்துல இருக்கும். அடியைப் பத்திக் கவலைப்படாம விளையாடுவேன். இன்னொரு விஷயம், உடற்பயிற்சி மாதிரியே மனசும் ரொம்ப முக்கியம். கோல் போடாமல் மிஸ் பண்ணிட்டோமே என்று புலம்பிக்கிட்டு நின்னா, அடுத்தடுத்த முயற்சிகளைச் செய்ய முடியாது. நம் உணர்ச்சிகளைப் பக்குவமா வெச்சுக்கணும். வெற்றியை நோக்கிய பயணத்துல தோல்வியும் ஒரு படிக்கல்தான்.கால்பந்துல கிறிஸ்டினா ரொனால்டோதான் என் முன்மாதிரி. ஒவ்வொருமுறையும் போட்டிக்குப் போகும்போது, அவரோட வீடியோக்களைப் பார்த்துட்டுப் போவேன். அது ஒரு சென்டிமென்டாகவே வளர்ந்துடுச்சு. அது தருகிற உத்வேகத்துக்கு அளவே இல்லை.இப்போ நான் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் முதலாண்டு படிச்சுட்டு இருக்கேன். லண்டன்ல பெண்கள் கால்பந்துக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. நம்ம ஊர் மண்ணுல விளையாடி பழகிட்டு, பின்னர் லண்டனில் புல் தரையில விளையாட ஆரம்பிச்சப்போ, முதலில் கஷ்டப்பட்டேன். ஆனா இப்போ பழகிடுச்சு. பயிற்சிகளும், நமக்குக் கிடைக்கற விளையாட்டு வாய்ப்புகளும் அங்கே ரொம்ப அதிகம். அங்க சொல்லிக் கொடுக்கற விஷயத்தைக் கத்துக்கிட்டு, திரும்பி இந்தியா தான் வரப்போறேன். இந்தியாவுல சீனியர்ஸுக்கான கால்பந்து போட்டியில நம்ம நாட்டுக்காக விளையாடணும். அதுதான் என் லட்சியம். அதேமாதிரி எதிர்காலத்துல பெண்கள் விளையாடுவதற்கு நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தணும்.”அதிதி, ஃபார்வேர்டு ப்ளேயர். கோல் போடும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், அவருக்கு அதுதான் பிடிக்குமாம்.அதிதி, சென்னையைச் சேர்ந்தவர். தமிழகத்திலிருந்து தேர்வாகி, தேசிய அளவிலான பல போட்டிகளில் விளையாடி இருக்கிறார். டென்மார்க்கில் நடந்த பெண்களுக்கான ஜூனியர்ஸ் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஆடியிருக்கிறார். 19 வயது நிரம்பிய அதிதி, இப்போது, லண்டன் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாகவியல் படித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !