உள்ளூர் செய்திகள்

பாட்டு சொல்லும் ஊர், எந்த ஊர்?

ஒரு பாட்டில் எல்லாவிதமான சுவைகளையும் வைத்து எழுதலாம். சொற்சுவை பொருட்சுவையோடு புதிர்ச்சுவையையும் சேர்த்து எழுதுவது புலமை விளையாட்டு. இரண்டு பொருட்களுக்கும் பொருந்துவதுபோல் எழுதினால் அது இரட்டுற மொழிதல் எனப்படும் சிலேடை. அவ்வாறே ஒரு பாடலில் விடுகதையையும் வைத்து எழுதலாம். இராமசாமிக் கவிராயர் இயற்றிய தனிப்பாடல் ஒன்று அத்தகைய விடுகதையைச் சொல்கிறது. அதற்கான விடையைக் கண்டுபிடிப்பது நம் திறமை.பாடல் இதுதான்.முன்னொரு ஊரின் பேராம்; முதலெழுத் தில்லா விட்டால்நன்னகர் மன்னர் பேராம்; நடுவெழுத் தில்லா விட்டால்கன்னமா மிருகத் தின்பேர்; கடையெழுத் தில்லா விட்டால்உன்னிய தேனின் பேராம்; ஊரின்பேர் விளம்பு வீரே.முதலில் அது ஓர் ஊரின் பெயர். முதலெழுத்தை நீக்கினால் அந்த ஊரின் பெயர் தலைநகரத்தை உடைய மன்னர்க்குப் பெயராகும். அவ்வூர்ப் பெயரின் நடுவெழுத்தை நீக்கினால் பெரிய காதுகளையுடைய விலங்கின் பெயராகும். கடைசி எழுத்தை நீக்கிவிட்டால் தேனை நினைவுபடுத்தும் ஒரு பெயராகும். அந்த ஊரின் பெயரைச் சொல்லுங்கள். - இதுதான் பாடலின் பொருள்.விடையைக் கண்டுபிடிக்க முடிகிறதா? முதலெழுத்து, நடுவெழுத்து, கடையெழுத்து என்று வருவதால், அவ்வூர்ப் பெயருக்கு மூன்றெழுத்துகள் என்பது விளங்குகிறது. நடுவெழுத்து ஒன்றேயொன்றுதான் இருக்க வேண்டும். ஏனென்றால் நடுவெழுத்தில் ஒன்று, இரண்டு என்கிற குறிப்பே இல்லை. நடுவெழுத்து என்று மட்டும் இருக்கிறது. அதனால் இப்பாடல் குறிப்பிடும் ஊர்ப்பெயருக்கு மூன்றே எழுத்துகள்.முதலெழுத்தை நீக்கினால் மன்னர் பெயர். நடுவெழுத்து இல்லாவிட்டால் விலங்கின் பெயர். கடைசி எழுத்து இல்லாவிட்டால் தேனின் பெயர். மதுரை என்பது பொருந்துகிறது.முதலெழுத்து ம இல்லாவிட்டால் துரை - நகரத் தலைவர், மன்னர் என்பது பொருள்.நடுவெழுத்து து இல்லாவிட்டால் மரை - மரை என்றால் மான். விலங்குதான்.கடையெழுத்து ரை இல்லாவிட்டால் மது - தேனைக் குறிப்பது.மதுரை என்பது மிகச்சரியான விடை.- மகுடேசுவரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !